கொழும்பு பிரதேசத்தில் இருக்கும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் பங்களிப்புடன் பாரிய கப்பம் கோரல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பெரும்பாலும் சிறுபான்மை இன வர்த்தகர்களே இவர்களின் இலக்காக இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து பொதுமக்களை எச்சரித்துள்ள பொலிசார், அவ்வாறான கப்பம் கோரல் நடவடிக்கைகள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபோன்ற கப்பம் கோரும் சம்பவங்களுக்கு முகம் கொடுக்கும் வர்த்தகர்கள் அல்லது அது தொடர்பான தகவல்களை அறிந்துள்ள பொதுமக்கள் 011 2 66 23 11 , 011 2 68 51 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அது குறித்த தகவல்களை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சிறைக் கைதிகள் குறித்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பொலிசார் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment