மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதினம் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மாலை உணர்வுவூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துக்ருக்கொண்டான் பனிச்சையடியில் உள்ள உயிரிழந்தவர்களின் நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பனிச்சையடி தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.கோடிஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.சௌந்தரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது பெருமளவான பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வனையொட்டி பெருமளவான படையிரும் புலனாய்வாளர்களும் நிகழ்வு நடைபெற்ற இடத்தில் குழுமியிருந்த போதிலும் பெருமளவான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1990ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கொக்குவில், சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் சுற்றிவளைப்பு மேற்கொண்ட இராணுவத்தினர் சிறுவர்கள் பெண்கள் ஆண்கள் என 184 பேர் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போன நிலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment