September 19, 2015

ஐ.நா. விசாரணை அறிக்கையின் கனதி குறைவதற்கு புதிய அரசின் செயற்பாடுகளே காரணம்: மைத்திரி- ரணில் கூட்டாக அறிவிப்பு!ஐ.நா. விசாரணை அறிக்கையின் கனதி குறைவதற்கு புதிய அரசின் செயற்பாடுகளே காரணம்: மைத்திரி- ரணில் கூட்டாக அறிவிப்பு!

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளின்
அறிக்கை கனதி (காரம்) குறைவாக இருப்பதற்கு புதிய அரசாங்கத்தின் நம்பிக்கையூட்டும் செயற்திட்டங்களே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடனான சந்திப்பொன்றை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தியிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதியினாலும், பிரதமரினாலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கருத்து வெளியிடும் போது, “ஐ.நா.வினால் வெளியிடப்பட்ட அறிக்கை பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் மாத்திரமே ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால், இந்த அறிக்கை காரம் குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதைப் பற்றி எவரும் பேசவில்லை.
மனித உரிமைகள் ஆணையாளர் அலுலகத்தின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. அது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் மற்றும் முக்கிய தரப்புகளுடனும் பேச்சு நடத்தப்படும்.
இறுதிக் கட்ட போரில் கலந்துகொண்ட படைத்தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சில மூத்த அரசியல்வாதிகள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அறிக்கை தொடர்பில் அச்சமடைந்திருந்தனர். தங்களுடைய பெயர்கள் வெளிவந்து விடுமோ என்றும் பயணத் தடைகள் மற்றும் வேறுவிதமான நெருக்கு வாரங்கள் தங்களுக்கு ஏற்பட்டுவிடும் என அவர்கள் அஞ்சியிருந்தனர்.
ஆனால் எவருடைய பெயரும் அறிக் கையில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே காரணம். தேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச உறவுகளை வளர்த்துக் கொள்ளும். முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சர்வதேச நாடுகளிடம் இருந்து இலங்கையைத் தனிமைப்படுத்தியது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப செயற்படுகின்றது.
ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து உருவான நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளால் சர்வதேசத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனை எவரும் மறுக்க முடியாது. இதனால் ஜனவரிக்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையின் காரம் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த அறிக்கை ஜனவரி 8க்கு முன்னர் அல்லது மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தால் 100க்கு நூறு வீதம் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கும்.
இந்த அறிக்கை தயாரிக்கப்படும் போது சில முக்கியஸ்தர்களின் பெயர்களையும் உள்ளடக்கும் சாத்தியம் இருந்தது. என்றாலும், நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் இவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
புதிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பான செயற்பாடுகளால் பிரிந்து கிடந்த சர்வதேசத்தையும் நாம் எங்களோடு இணைத்து செயற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர், பிரதமர் உட்பட நானும் சர்வதேச தரப்புகளுடன் இது தொடர்பில் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.
உள்ளகப் பொறிமுறைதான் எங்கள் இலக்கு. இது தொடர்பில் ஐ. நா. வுடன் பேசியிருந்தோம். இதற்கு சமாந்தரமாக, தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை காணாமற்போனோர் தொடர்பான விடயங்கள், மனித உரிமை செயற்பாடுகளில் ஜனவரி 8க்குப் பின்னர் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், புதிய அரசாங்கத்தின் மீது சர்வதேசத்துக்கு பாரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நல்லிணக்க செயற்பாடுகளுக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் செயலகம் உருவாக்கி செயற்பட்டு வருகிறோம். நாம் வெற்றி பெறாவிட்டால் நாட்டுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், மஹிந்தவின் அரசு ஆட்சியிலிருந்திருந்தால் நாடு பாரிய விளைவுகளைச் சந்தித்திருக்கும்.
ஐ. நா. அறிக்கை காரம் குறைக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட நிலைமையில்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. சர்வதேச விசாரணையென்று அவர்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், சர்வதேச விசாரணையா உள்ளக விசாரணையா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்த இரண்டு விசாரணைகளில் ஏதாவது ஒன்றுக்கு நாம் முகம் கொடுத்துத் தான் ஆக வேண்டும். ஆகவே, நாம் கலந்துரையாடல்களை நடத்தி அதற்கான பொறிமுறையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்காக நாட்டில் இனவாதத்தைப்பரப்பி நாட்டை தீயவழியில் இட்டுச் செல்ல சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன. இதற்கு எந்தவகையிலும் இடமளிக்க முடியாது.
இந்த அறிக்கை காரம் குறைத்து வெளியிடப்பட்டிருப்பதற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு காரணம் என்பதையும் நடு நிலையோடு ஊடகங்கள் சுட்டிக்காட்டுவதுதான் தர்மம்.” என்றுள்ளார்.
இங்கு எழுகப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர, இந்த அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் கூறியதோடு ஐ. நா. அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டினார்.
மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால், நாடு இன்று அதளபாதாளத்துக்குச் சென்றிருக்கும். ஜனவரி 8க்கு முன்னர் மட்டுமல்ல மார்ச் மாதத்தில் வெளியிடப் பட்டிருந்தாலும் நாடு பாதிக்கப்பட்டிரு க்கும் என்று கூறிய அவர் மூன்று விடயங்களில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க சர்வதேசம் தயாராக இருந்ததாகக் கூறினார்.
இலங்கை மீது பயணத்தடை விதிப்பதற்கும், இராணுவ அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பதற்கும், பொருளாதாரத்தடை விதிப்பதற்கும் சர்வதேசம் தயாராக இருந்தது. என்றாலும், நாம் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலம் சகலவற்றையும் மட்டுபடுத்தி ஓரளவு காரம் குறைந்து அறிக்கையை வெளியிடுவதற்கு சாதகமாக அமைந்தது என்றும் கூறினார்.
நீதித்துறையில் நம்பிக்கையில்லாமல் இருந்ததால்தான் சர்வதேச விசாரணை பற்றி சர்வதேசம் யோசிக்கிறது. உண்மையில் நமது நாட்டில் நீதித்துறையில் அரசியல் தலையீடு இருந்தது.
பிரதம நீதியரசர் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டமை, அதேநேரம் நாமல் ராஜபக்ஷ வீட்டறையிலிருந்து சட்டத்துறை சம்பந்தமான பரீட்சை எழுதியமை எல்லாம் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளுக்கு உதாரணமாக கொள்ளலாம். இவைகளால்தான் சர்வதேசம் இலங்கை மீது நம்பிக்கை இழந்தது என மங்கள சமரவீர கூறினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சர்வதேச ஒப்பந்தம், ஐ. நா. அறிக்கை பற்றிப் பேசுவோர் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். 2007ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அரசு தான் சர்வதேச ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்த ஒப்பந்தத்தில் தயான் ஜயதிலக கையெழுத்திட்டிருக்கிறாரென விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.
கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “சர்வதேச விசாரணை பற்றிப் பேசுவோர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க சுட்டுக்கொல்லப்பட்ட விசாரணையில் மூன்று நீதிபதிகள் பங்குகொண்டனர். இவர்களில் இருவர் வெளிநாட்டுக்காரர்கள். இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பிஜி போன்ற நாடுகளில் பல விசாரணைகளுக்கு எமது நாட்டு நீதிபதிகள் பயன்படுத்தப்படுகிறார்கள் இதுவும் சர்வதேச விசாரணைதானே? ஆகவே, விமர்சிப்பவர்கள் பொறுப்புடன் விடயங்களை ஆராய்ந்து கருத்து தெரிவிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம்தான் சர்வதேசத்துக்கு சென்று பொய் வாக்குறுதிகளை வழங்கியது. இறுதியில் சர்வதேசத்தைப் பகைத்துக்கொண்டது. தற்பொழுது நாடு ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை 100 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் தற்பொழுது இலங்கை தொடர்பில் தெளிவான நிலையில் இருக்கிறது. ஆகவே, இதே நிலைமை தொடர வேண்டுமானால் நாட்டின் தற்போதைய தேவை மஹிந்த ராஜபக்ஷ இல்லாத அரசாங்கமே.” என்றுள்ளார்.

No comments:

Post a Comment