September 4, 2015

எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்’ டெல்லி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

எல்லா பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சர்வதேச மாநாடு
‘உலக அளவில் மோதல்களை முடிவுக்கு கொண்டு வர இந்து மற்றும் புத்த
மதங்களின் முயற்சி’ என்ற பெயரில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா, ஜப்பான் வெளியுறவு மந்திரி மினோரு கியூச்சி, மத்திய மந்திரிகள் மகேஷ் சர்மா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மங்கோலியா, கம்போடியா நாடுகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கு கொண்டனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:–
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
அதிகார பலம் மற்றும் வலுவான சக்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் நிலைமை இப்போது மாறி விட்டது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.
போரினால் ஏற்படும் பாதிப்புகளை நாம் கண்டு இருக்கிறோம். இப்போது போரின் தன்மை மாறிவிட்டது; ஆபத்துகளும் அதிகரித்து விட்டன. போரில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கு கொள்வது, நீண்ட காலம் போர் நடப்பது என்ற நிலை மாறி, ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால் போர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஆகாது.
ஆதிசங்கரர்
பழங்கால இந்தியாவில் நம் முன்னோர்கள், கருத்து வேறுபாடுகளுக்கு பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கண்டு இருப்பதை நாம் அறியலாம். உதாரணமாக ஆதி சங்கரர் இளைஞராக இருந்த போது, அவருக்கும் முதியவரான மந்தனா மிஸ்ராவுக்கும் இடையே மத சடங்குகள், சம்பிரதாயங்கள் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், இதைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே விவாதத்துக்கு அறிஞர்கள் ஏற்பாடு செய்ததாகவும், அதில் ஆதி சங்கரர் வெற்றி பெற்றதாகவும் நாம் அறிகிறோம். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள்.
இந்த பூமியில் நமது எதிர்கால சந்ததியினர் அமைதியுடனும், கண்ணியத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. அதற்காக மோதல்கள் அற்ற உலகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
பருவ நிலை மாற்றம்
இந்தியாவில் உள்ள பாரம்பரியமிக்க புத்தமத சின்னங்களை பேணி பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எனது அரசாங்கம் மேற்கொண்டு உள்ளது. இவற்றை காண வெளிநாடுகளில் மக்கள் வருவது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்கும்.
பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக விளங்குகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் மோதல்கள் போன்றவற்றை எதிர்த்து போராட நமது இந்து, புத்த மத நம்பிக்கைகள், சித்தாந்தங்கள் உதவியாக இருக்கும். இயற்கை வளங்களை பாதுகாப்பாக விட்டுச் செல்லும் கடமை நமக்கு உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
சந்திரிகா
மாநாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா பேசுகையில், தீவிரவாதம் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருவதாகவும், அபிவிருத்தியின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும், அனைத்து சமூகத்தினரையும் சமமாக கருதுவது மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் வீடியோ உரை மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment