வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தி விசேட அதிரடிப்படை முகாமை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், அடம்பன்குளம் குருசை சந்தியில் உள்ள விசேட அதிரடிப் படை முகாம் வேலிக்கு இரவு நேரத்தில் விநியோகிக்கப்பட்ட மின்சாரம் ஆனது விடியற்காலையும் நிறுத்தப்படாது இருந்த நிலையில்,
அருகில் இருந்த வீட்டு குடும்பப் பெண்ணான கந்தசாமி இராஜேஸ்வரி (வயது 55) வேலியில் உள்ள மரங்களில் இலைகளை பறித்த போது மின்சாரம் தாக்கியதில் அவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்தார்.
இதனையடுத்து அவரது இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறும் நிலையில் அப்பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உள்ள இவ் விசேட அதிரடிப்படை முகாமை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்,
குறித்த பெண்ணின் மரணத்திற்கு பாரபட்சமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அதிரடிப்படை முகாம் முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ் விசேட அதிரடிப்படை முகாமானது எமது பகுதி நெற்களஞ்சியசாலை, கமநலசேவை நிலையம், பலநோக்கு கூட்டுறவுச் சங்களம் உள்ளிட்ட பல பொதுத் தேவைகளுக்குரிய காணிகளை உள்ளடக்கியுள்ளது.
இதனை அகற்றுமாறு பல தடவை கோரிக்கைவிடுத்தும் உரிய தீர்வு தரப்படவில்லை.
தற்போது இவ் இராணுவ முகாமின் பொறுப்பற்ற செயற்பாட்டால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே, உடனடியாக இந்த இராணுவ முகாமை இவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு ஒரு உயிர் இழப்புக்கு காரணமான இச்செயற்பாட்டுக்கு சட்டரீதியில் பாராபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு வருகை தந்த வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.நடராஜா, இ.இந்திரராசா ஆகியோரிடம் மக்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த வவுனியா மாவட்ட நீதிமன்றம், குறித்த பகுதி அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்துமாறு நேற்றைய தினம் செட்டிகுளம் பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment