September 29, 2015

வடக்கு மீனவ அமைப்புக்கள் முற்றுகைப் போராட்டங்களில் குதிக்கத் தயார்!

இந்திய இழுவைப்படகுகளது அத்துமீறல் தொடர்பில் இந்திய-இலங்கை அரசுகளது பதில்களிற்காக காத்திருப்பதாக வடமாகாண மீனவ அமைப்புக்கள அறிவித்துள்ளன.
யாழ்.ஊடக அமையத்தில் மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்.மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகள் பங்கெடுத்த பத்திரிகையாளர் மாநாடொன்று இன்று இடம்பெற்றது.
வடமாகாண மீனவ சமாசங்களின்  சம்மேளனத்தலைவர் எமிலியாம்பிள்ளை, கிளிநொச்சி மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ் மற்றும் மீன்பிடி துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார் சர்வானந்தா மற்றும் சூசை உள்ளிட்டவர்களும் மாநாட்டினில் பங்கெடுத்திருந்தனர்.வடமாகாண மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் எமிலியாம்பிள்ளை கருத்து வெளியிடுகையில்,கடந்த 23ம் திகதி நாம் எமது கோரிக்கைகளினை வலியுறுத்தி யாழ்.நகரினில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்திருந்தோம். அத்துடன் கோரிக்கைகளை இலங்கை அரசிற்கும் இந்திய அரசிற்கும் கையளித்துவிட்டு காத்திருக்கின்றோம்.ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நாம் தொடர் முற்றுகைப் போராட்டங்களில் குதிப்பது தவிர்க்க முடியாது. எமது மீனவ அமைப்புக்கள் அதனை தொடர்ச்சியாக வற்புறுத்தி வருகின்றன.
இந்திய தூதரக அதிகாரிகள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மகஜர் தொடர்பில் பதில் பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்கள்.ஆனால் இன்று வரை பதில் கிட்டியிருக்கவில்லை. இந்நிலையினில் நீண்ட நாட்களிற்கு காத்திருக்க முடியாதென தெரிவித்த அவர்கள், இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்தினால் உள்ளூர் மற்றும் தென்னிலங்கை படகுகளை தடுத்து நிறுத்துவது கடினமானதல்லவெனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment