September 19, 2015

உங்க அரசியலுக்கு எங்கள் உயிரா?தமிழ்நாடு முதல் உலகநாடுகள் வரை குமுறும் ஈழம்இரா.இளையசெல்வன்!

நெஞ்சம் பதைபதைக்க லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும் இரசாயன குண்டு களாலும் கொன்றழிக்கப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்து 6 ஆண்டுகள் கழிந்து விட்டன.
பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் ஈழத் தமிழினத்தின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அடக்கி சிதைத்து தமிழ்த் தேசியத்தை இலங்கையின் ராஜபக்ச இராணுவம் கருவறுத்ததை வேடிக்கை பார்த்ததுடன் இலங்கை அரசுக்கு உறுதுணையாகவும் நின்றன உலக நாடுகள்.
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் இன அழிப்புக்கும் சுதந்திரமான நம்பத்தகுந்த சர்வதேச விசாரணை வேண்டும் என உலக தமிழர்களும் தமிழர் அமைப்புகளும் தமிழக அரசியல் கட்சிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் 6 ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் சையத் அல் ஹுசைன் தனது அறிக்கையை கடந்த புதன்கிழமை (16.9.2015)  ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தாக்கல் செய்திருக்கிறார்.
285 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ள ஹுசைன், சிறப்பு கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
அல் ஹுசைனின் அறிக்கை இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மனித உரிமை கவுன்சிலில் பேசிய இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ""கடந்த காலத்தில் ( ராஜபக்ச அரசில்)  நடந்த தவறுகளுக்கு நிர்வாக சீர்கேடுகள்தான் காரணமென்பதை புரிந்து கொண்டிருக்கிறோம்.
தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை தருவதற்கான வழிமுறைகள் ஆராயப்படுகிறது. எங்களை நம்புங்கள். கடந்த கால தவறுகளுக்கு காரணமானவர்களை கண்டறியும் உள்நாட்டு விசாரணையை நடத்தி தீர்வு காண்கிறோம் என்றெல்லாம் கெஞ்சியிருக்கிறார்.
இந்தநிலையில் அல் ஹுசைனின் அறிக்கை இன அழிப்பிற்குள்ளான ஈழத் தமிழினத்தின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு கொடுத்திருக்கிறதா என பல்வேறு வாதப் பிரதிவாதங்களை எதிரொலிக்கச் செய்து வருகிறது.
சர்வதேச மனித உரிமைகளுக்காகப் போராடும் பிரபல வழக்கறிஞர் ருக்கி பெர்ணாண்டோ, ""இந்த அறிக்கை என்பது முதல்படியே தவிர வேறு ஒன்றுமில்லை. சர்வதேச சமூகத்தின் கூட்டு நடவடிக்கையால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும்'' என்கிறார்.
அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்ந்து வரும் இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன், ""அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய நீதிமன்ற விசாரணை வேண்டுமென்பதை ஐ.நா.மன்றத்தில் நாங்கள் வலியுறுத்தியிருந்தோம். அதனை ஒட்டியே, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென ஹுசைனின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் அதனை வரவேற்கிறோம்'' என்கிறார்.
வடக்கு மாகாண கவுன்சிலின் முதல்வர் விக்னேஸ்வரன், ""இந்த அறிக்கையை தொடர்ந்து தாக்கல் செய்யப்படவிருக்கும் தீர்மானம்தான் முக்கியமானது. அதை எந்த வடிவத்தில் அனைத்துலக நாடுகள் கொண்டு வருகிறதென்பதை பொறுத்துத்தான் எங்களின் நம்பிக்கை வலுப்பெறும்'' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.யான சுரேஷ் பிரேமச்சந்திரனோ, ""கலப்பு நீதிமன்ற விசாரணை என்பது போர்க் குற்றங்களை முழுமையாக ஆராய்வதற்கு எந்த வகையிலும் பொருத்தமாக அமையாது'' என்கிறார் அழுத்தமாக.
வடக்கு மாகாண சபை உறுப்பினரான ஆனந்தி சசிதரன் பொங்கித் தீர்த்துவிட்டார்.
இலங்கையில் நடந்தது திட்டமிடப்பட்ட ஒரு இன அழிப்பு. அதனை மைய இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டதுதான் அத்தனை போர்க்குற்றங்களும். ஆனால், இன அழிப்பு நடந்ததாக அல் ஹுசைன் தலைமையிலான விசாரணைக்குழு ஒப்புக்கொள்ளவில்லை. மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு இன அழிப்பு நடந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டி நான் பேசிய போது, இன அழிப்பு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள் என அனைத்துலக பிரதிநிதிகளால் எனக்கு நெருக்கடி தரப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்து இன அழிப்பு என்பதை பதிவு செய்தேன். இன அழிப்பை ஏற்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொள்ள மறுப்பதினால் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு இந்த அறிக்கையால் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை'' என்கிறார் நம்மிடம்.
இந்தச் சூழலில், "சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பதுடன், அமெரிக்கா துணையுடன் சர்வதேச விசாரணைக்கான தீர்மானத்தை ஐ.நா.வில் கொண்டு வந்து நிறைவேற்ற இந்திய அரசு முயற்சிக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
இதற்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றிய போதும் அப்போதைய பிரதமர் மன்மோகனுக்கு இதே போன்றுதான் கடிதம் எழுதினார். அதன் பிறகு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஈழ ஆதரவு உணர்வை தடா -பொடா மூலம் தமிழகத்தில் நசுக்கிய ஜெ., இலங்கை போரின் உச்சக்கட்டத்திலும் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் பேசினார். எல்லாம் முடிந்துவிட்டது எனத் தெரிந்துகொண்ட பிறகே அவர் ஈழ ஆதரவு நிலை எடுத்து, ஆட்சியைப் பிடித்து தீர்மானங்களை நிறைவேற்றி கோல் போட்டு வருகிறார்' என்கிறார்கள் ஈழப் பிரச்சினையின் ஆணிவேர் அறிந்தவர்கள். .
ஜெ.வைத் தொடர்ந்து கலைஞரும் இதேபாணியில் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசும், சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் கலப்பு நீதிமன்றத்தை எதிர்ப்பதுடன் "சர்வதேச நீதிமன்ற விசாரணையே வேண்டும்' என வலியுறுத்துகின்றனர்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ""போர்க்குற்றங்களை நிரூபிப்பதற்கு முதல் வழி புலனாய்வு விசாரணை. புலனாய்வு செய்யாமல் சர்வதேச நீதிமன்றத்தை கோர முடியாது. அந்த வகையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருப்பது புலனாய்வு குழுவின் அறிக்கை. அதில், அனைத்துலக நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் இலங்கையில் அமைக்க பரிந்துரைத்திருப்பது பொருத்தமாக இல்லை. இந்த கலப்பு நீதிமன்றத்தை இலங்கையை தவிர்த்து வேறு நாடுகள் ஒன்றில் நடத்த பரிந்துரைத்திருக்க வேண்டும்.
மனித உரிமை மீறல் குறித்து பேசும் இந்த அறிக்கை, வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை அழித்தொழித்த போர்க்குற்றத்தை சுட்டிக்காட்ட மறுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இலங்கையின் பின்னால் நின்று யுத்தத்தை நடத்தின. அவைகளைப் பற்றி அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. அதே போல, குற்றவாளிகளையும் அடையாளப்படுத்தவில்லை.
அறிக்கையில் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அமெரிக்கா, இந்தியா, சீனா நாடுகளின் அழுத்தம் காரணமாக அவை கடைசி நேரத்தில் நீக்கப்பட்டன என்றும் எனக்கு தகவல் கிடைக்கிறது.
இலங்கை அரசின் போர்க்குற்றத்துடன் புலிகளையும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுவது தவறானது. உரிமைக்காகப் போராடும் இயக்கத்தின் நடவடிக்கைகள் போர்க்குற்றமாக கருதப்படக்கூடாது. அதேபோல, கலப்பு நீதிமன்ற விசாரணையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள தீர்மானத்தால் எந்த பலனும் இல்லை'' என்று விவரிக்கிறார் ராதாகிருஷ்ணன்.
2009-முதல் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பங்கெடுத்து வரும் பசுமைத் தாயகம், இதுவரை 9 முறை தனது கருத்தை அங்கு பதிவு செய்திருக்கிறது. இந்த முறையும் பசுமைத் தாயகம் சார்பில் கலந்துகொள்ள ஜெனிவாவிற்கு செல்லும் பா.ம.க.வின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, ""ராஜபக்சவின் போர்க்குற்றங்களுக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதை தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பதிவு செய்து வருகிறோம்.
இந்தநிலையில், சர்வதேச அரசியலில் மனித உரிமை மீறல், மனிதநேய மீறல், போர்க்குற்றம் ஆகிய பொறிக்குள் இலங்கை அரசு சிக்கியிருப்பதை ஹுசைனின் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கிவிட முடியாது. ஏனெனில், அதனை இலங்கை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒப்புக்கொள்ளாவிடில், ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றினால்தான் இலங்கை ஒப்புக் கொள்ளாத பட்சத்திலும் அதனை வழிக்கு கொண்டு வர முடியும்.
பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம்கொண்ட அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன. அதில் ஒரு நாடு எதிர்த்தாலும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. தீர்மானம் தோற்றுப் போனால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது.
மேலும் சர்வதேச குற்றங்களுக்கான நீதிமன்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை. இப்படிப்பட்ட சூழலில், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கும் இன அழிப்பிற்கும் எதிரான தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றினால் மட்டுமே சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த முடியும்'' என்கிறார் மிக அழுத்தமாக.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இலங்கையின் போர்க்குற்றங்களை அல் ஹுசைன் தலைமையிலான குழு அம்பலப்படுத்தியிருந்தாலும் இலங்கையின் உள்நாட்டு விசாரணையைக் கொண்டே தீர்வு காணப்படவேண்டும் என்கிற கோட்பாட்டில் அழுத்தமாக இருக்கும் இந்தியாவின் மறைமுக காய்நகர்த்தல்களே இதன் பின்னணியில் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள் இலங்கை அரசியல் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவும் இதே நிலையில் இருப்பதால் ஐ.நா. அறிக்கை வெறும் காகிதங்களாகத்தான் இருக்கும் என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.
லட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழரின் உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்த அத்தனை தலைவர்களும், நாடுகளும் இப்போது "யோக்கியஸ்தர்'  நாடகம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
வாழ்வுரிமை இழந்தவர்களை இன்னமும் பகடைக்காயாக உருட்டி விளையாடுகிறார்கள் சுயநலவாதிகள்.
""உலக அரசியலுக்கு எங்க உயிரா'' என ஈழமக்கள் குமுறுகிறார்கள். உண்மையான விசாரணையும் நியாயமான உரிமையும் கானல் நீராகவே தெரிகின்றன.
இரா.இளையசெல்வன் -
நக்கீரன்

No comments:

Post a Comment