September 19, 2015

பூநகரியில் வடக்கின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலை(படங்கள் இணைப்பு)

வடமாகாணத்தின் முதலாவது மீன்தீவன உற்பத்தி ஆலையை பூநகரியில் வடமாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வியாழக்கிழமை (17.09.2015) திறந்துவைத்துள்ளார்.பூநகரி பள்ளிக்குடாவில் கொடுவா மற்றும்
பாலைமீன் வளர்ப்புத்திட்டம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரையை அண்மித்ததான கடலில் பண்ணைகள் அமைத்து வளர்க்கப்படும் இம்மீன்களுக்குப் புரதத் தீவனத்தை வழங்குவதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கடலில் பிடிக்கப்படும் சிறிய மீன்கள் வெய்யிலில் உலரவைத்துப் பண்ணை மீன்களுக்கான தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைக் கருத்திற் கொண்டே மீன்களுக்கான தீவனத்தை உற்பத்தி செய்யும் நவீனஆலை இப்போது பூநகரியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தொழிலாளர் நிறுவனம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்துக்கு வழங்கிய 4 மில்லியன் ரூபாவில் இந்த மீன்தீவன உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலில் உபபிடிபாடுகளாகக் கிடைக்கும் மீன்களை உலர வைப்பதற்கும், அரைப்பதற்கும், தானியங்களை அரைப்பதற்கும், அரைத்து மாவாக்கப்பட்ட மீன்களையும் தானியங்களையும் கலப்பதற்கும் எனத் தனித்தனியாக நவீன இயந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் மீன்தீவனம், பூநகரிப் பகுதியில் உள்ள மீன்பண்ணைகளுக்கு மாத்திரம் அல்லாமல், எதிர்காலத்தில் வடக்கின் ஏனைய கரையோரங்களில் அமைக்கப்பட இருக்கும் மீன்பண்ணைகளுக்கும் விநியோகிக்கும் அளவுக்குப் போதுமானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்தீவன உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசனோடு சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் நிகால் தேவகிரி, கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கு.அருந்தவநாதன், கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இ.ரவீந்திரன், பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் சமாசத் தலைவர் யோசப் பிரான்சிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.









No comments:

Post a Comment