September 29, 2015

பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்-கி.துரைராசசிங்கம்!

இப்போது உருவாகியிருக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு எமது பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன முக்கிய காரணமாக இருந்ததோ அந்த விடயத்திற்கான தீர்வு காணப்பட வேண்டும். நாம் போர்க்குற்றத்தினை
நிரூபிப்பதற்கான எங்களுடைய பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்ற அதேவேளை சிறந்தவொரு அரசியல் தீர்வினைப் பெறுவதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வந்தாறுமூலையில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஇவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் தமித் தேசியத்தின் பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் கொண்டிருந்த பற்றினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் மேல் வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவே பெருவாரியான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குப் போடப்பட்டன. அதன் காரணமாக நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றோம். தற்போது இந்தப் பாராளுமன்றப் பலத்தை வைத்துக் கொண்டு ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விடயங்களை முன்நகர்த்திச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கின்றது.
இலங்கையின் போர் முடிந்ததன் பிற்பாடு இலங்கையில் போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தெரிவித்ததை அன்றைய ஜனாதிபதி மறுத்ததில் இருந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வு இருள் சூழ்ந்ததாகத் தான் இருந்தது. அந்த நிலையில் எமது நிலையை ஐக்கிய நாடுகள் சபைக்கோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் வேறு அமைப்புகளுக்கோ கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
இந்த நேரத்தில் தான் எமது மதிநுட்பமான குழு அமெரிக்கா மற்றும் பல நாடுகளை அனுகிய போது அங்கு அனைத்தினாலும் ஒரு விடயம் கூறப்பட்டது ஆட்சியில் இருக்கும் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பது போன்றது என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் போர்க்குற்றம் தொடர்பாக ஒரு நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே சர்வசே சட்டத்தில் இடம் இருக்கின்றது ஆனால் ஒரு நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஏற்பாடுகள் கிடையாது என்று தெரிவித்தன.
அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய முயற்சியால் சர்வதேச நாடுகள் எம்முடன் கைகோர்த்து இதனை வேறு ஒரு முறையில் மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமையத்தில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் எமது விடயம் கையாளப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து தான் இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விடயங்கள் மெல்ல மெல்ல எழுந்தன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
2013, 2014, 2015ம் ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பல வகைகளில் உதவிய புலம்பெயர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகளின் காரணமாகத் தான் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றமும் அதனூடான விசாரணைகளும் இடம்பெறுகின்றன.
இலங்கைக்கு எதிரான முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்று முடிந்ததிருக்கின்ற வேளையில் இங்கு ஒரு குற்றச்செயல், போர்க்குற்றம், இன அழிப்பு ஏதோ ஒன்று நடைபெற்றிருக்கின்றது என்கின்ற சுருக்க விசாரணை அடிப்படையிலான கண்டறிதல் நடைபெற்றிருக்கின்றது. முகத்தோற்ற அளவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனைத் தான் நாம் சொன்னோம் சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கின்றது என்று இனி அடுத்த கட்டம் சாட்சிகளை அழைத்து கண்கண்டவர்களை அழைத்து நடாத்தப்படுகின்ற விசாரணை அந்த விசாரணை எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பது தான் இப்போது எல்லோர் முன்னும் இருக்கின்ற கேள்வி.
இது எவ்வாறு இருந்தாலும் நம்பகத்தண்மை உள்ள, பொறுப்புக் கூறக் கூடிய விசாரணை நடைபெற வேண்டும். அந்த அடிப்படையில் தான் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் இது சர்வதேசத் தரம் வாய்ந்த விசாரணையாக இருக்க வேண்டும் என்று. யாரும் எதிர்வு கூறாத படி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வைத்த அறிக்கையில் ஒரு கலப்பு நீதிமன்றம் மூலம் இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள் இதற்கும் அரசு இணக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. இதற்கு ஏற்ற விதமாக பல்வேறு விதமான மாற்றங்களை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டி இருக்கும்.
அவை ஒரு பக்கம் நடந்தாலும் கூட இன்னுமொரு பக்கம் தமிழர்களாகிய நாம் எமது அரசியல் வியூகத்தினை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதுதான் அரசியல் தீர்வு. சர்வதேச விசாரணை என்பது போர்க்குற்ற விசாரணை என்பது தொடர்;ந்து நடைபெற வேண்டிய ஒன்று. அது இன்றைக்கு நாளைக்கு நாளை மறுதினம் முடிவடையக் கூடியது அல்ல. அது தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
அதன் அடிப்படையில் இப்போது உருவாகியிருக்கும் சூழலை அடிப்படையாகக் கொண்டு எமது பிரச்சினைகளுக்கெல்லாம் என்ன முக்கிய காரணமாக இருந்ததோ அந்த விடயத்திற்கான தீர்வு காணப்பட வேண்டும் அதற்கான தீர்வு என்னவென்றால் பாதிக்கப்பட்ட எம்முடைய அரசியல் தீர்வு. எனவே தான் நாம் போர்க்குற்றத்தினை நிரூபிப்பதற்கான எங்களுடைய பங்களிப்புகளைச் செய்து கொண்டிருக்கின்ற அதே வேளை சிறந்தவொரு அரசியல் தீர்வினைப் பெறுவதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம் எமது தலைமையும் உழைத்துக் கொண்டிருக்கின்றது.
சிறந்த ஒரு அரசியற் தீர்வு என்பது ஒரு சமஷ்டித் தீர்வு. இணைந்த வடகிழக்கில் எங்களுக்கு அதிகூடிய அதிகாரத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் நீடித்து நிலைத்திருக்கக் கூடியதாகவும் பிரிந்த இறைமை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். சிறுபாண்மை மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் எமது வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்தக் காலகட்டம் தான் மிகவும் முக்கியமானதும் மிகவும் நுனுக்கமானதும் மக்கள் உணர்வு வயப்படாது உணர்வுகளைத் தம்வயப்படுத்தி இருக்க வேண்டிய காலமாக இருக்கின்றது. யார் எதைச் சொன்னாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எவ்விதமான விளக்குதலை நமக்கு தெரிவிக்கின்றதோ அந்த விளக்கத்தினை உள்வாங்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டபை;புடன் கைகோர்க்கும் மிகப்பெரிய கடமை எமது மக்களுக்கு இருக்கின்றது என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment