இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் இடம்பெறுவதோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர் என கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையை முன்னிலைப்படுத்தி இனவாதத்தை கட்டவிழ்த்து விட முயற்சிக்கும் பாசிச குழுக்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு சர்வதேச நாடுகளின் நம்பிக்கை பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நிறைவேற்ற இந்த சந்தர்ப்பத்தை தேசிய அரசானது உரியவாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கொழும்பில் அமைந்துள்ள நவசமசமாஜக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசேடகலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணைகள் உரிய முறையில் இடம்பெற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் யுத்த நடவடிக்கையின் போது இடம் பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஆட்சியை முன்னெடுத்த பாசிச குழுவினரினது சில மோசமான செயற்பாடுகளின் மத்தியிலேயே யுத்தத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில் இன்று யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருகின்ற விடயங்கள் தொடர்பில் முன்னைய ஆட்சியின் அரசியல் பிரமுகர்கள் உட்பட முன்னாள் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும்.
கடந்த காலங்களில் நாட்டில் சட்டம் மற்றும் நீதித்துறை என்பன சர்வாதிகார சக்திகளிடம் அடிபணிந்து காணப்பட்டது இவ்வாறான நிலையிலேயே ஊடகவியலாளர்கள், றக்பி வீரர்கள், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் அரசானது உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான விசாரணைகளை முன்னெடுக்கும் போது இராணுவத்தினர் அச்சம் கொள்ளத் தேவையில்லை காரணம் கடந்த காலங்களில் நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க இராணுவத்தினர் உண்மையான அர்ப்பணிப்பை முன்னெடுத்த போதிலும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் செயற்பட்ட தரப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் சிக்கி மோசமான முறையில் இவர்கள் வழிநடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே இன்று நாட்டுக்காக போராடிய வீரர்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே புதிய அரசானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதோடு விசாரணைகளை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தேசிய அரசாங்கத்தின் கீழ் இன்று அமைச்சு பதவிகள் தொடர்பில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தரப்பினரினால் இனவாத செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இவர்களே தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சி செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாகவும் காணப்படுகின்றனர். கடந்த பொது தேர்தலில் அனைத்து சிறுபான்மையின மக்களும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கே தமது ஆதரவை வழங்கினர்.
அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட தேசிய அரசானது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்க உரிய செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
தேசிய அரசாங்கத்தின் கீழ் இன்று தொழிற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உள்ளிட்டோர் இன்று மூவின மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் ஒரே பாதையிலேயே பயணிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இவர்களின் எதிர்கால செயற்பாடுகள் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் எமது நாட்டின் மூவின மக்களின் வாழ்க்கை தரத்தையும் அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் துணை நிற்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment