September 30, 2015

மன்னார் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எழும் குற்றச்சாட்டை மறுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டங்கள், மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த செய்தியை தாம் மறுப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம், நிதி மற்றும் கணக்காய்வுக்கான தலைமை அதிகாரி டி.வில்லியம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொது மக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் வைபவ ரீதியாக இன்று காலை திறந்து வைத்த பின் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தகைமை இருந்து தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்கள் தமது தகமைக்கு அமைவாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் வகையில், மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான ஒப்பந்தம், நிதி மற்றும் கணக்காய்வுக்கான தலைமை அதிகாரி டி.வில்லியம் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய, உதவி அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் இணைந்து திறந்தவைத்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது உரையாற்றிய திரு. டி.வில்லியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தில் மன்னார் மாவட்டம் புறக்கனிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
குறித்த செய்தியில் உண்மை இல்லை. ஏனைய மாவட்டங்களைப் போன்று மன்னார் மாவட்டத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment