September 5, 2015

ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வணக்கம் - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடகச்செய்தி!

'சத்தியத்திற்காகச் சாகத்துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்." 
                    -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்-
பேரன்பும், பெருமதிப்பும் மிக்க சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!



புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், 'அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்." என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013அன்று ஐ.நா முன்றலின் முருகதாசன் திடலிலே தீயினிற்கருவாகி தமிழீழ விடுதலைக்கு ஒளியாகிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


எங்களில் ஒருவனாய் உரிமையாய் உறவாடிய இளையவன்É தன் தாய்நாட்டின் மீதும், மாவீரர்களின் உன்னதமான உயிர்த்தியாகம் மீதும் கொண்ட பற்றுறுதியால், தான் நேசித்த தேசம் விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், வாழ்வின் அத்தனை சுகங்களையும் துறந்து தன்னுயிரை தீயினிற்கருவாக்கிய ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் ஈகத்திற்கு தலைவணங்கி வணக்கம் செலுத்துவதோடு, அவரின் குடும்பத்தினரையும் போற்றுகின்றோம்.

தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைக்கு சாதகமான புறச்சூழலை ஏற்படுத்தவும் தாய்த்தமிழகம், மலேசியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளிலே தமது இன்னுயிர்களை தீயினிற்கருவாக்கிய இருபத்தைந்து ஈகியர்களின் நினைவுகளோடும் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு வணக்க நிகழ்வு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 13.09.2015 ஞாயிறு பிற்பகல் 15:30 மணிக்கு  Salle de Bethusy, Avenue de Béthusy 7, 1005 Lausanne 7  என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வண்ணம் அன்போடு அழைக்கின்றோம். அத்தோடு, எதிர்வரும் 21.09.2015 திங்கள் பி.ப 14:30 மணிக்கு  ஜெனீவா ஐ.நா சபை முன்றலின் முருகதாசன் திடலிலே தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டும், எமக்கான விடுதலையை வலியுறுத்தியும் நடைபெறவுள்ள பேரணியிலே உணர்வெழுச்சியுடன் அணிதிரண்டு எமது கடமையையும், ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் இறுதி வேண்டுகோளையும் நிறைவேற்றும் வண்ணம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

No comments:

Post a Comment