ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மான வரைவில் இருந்து, அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்யும், 4ஆவது பந்தியை நீக்க வேண்டும் என்று ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் நேற்றும் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில் நேற்று அமெரிக்கா நடத்திய இரண்டாவது முறைசாராக் கலந்துரையாடலில், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றதைப் பரிந்துரைக்கும் 4ஆவது செயற்பாட்டுப் பந்தி தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்தப் பந்தியை நீக்க வேண்டும் என்று சிறிலங்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சிறிலங்காவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் நேற்று கருத்துக்களை முன்வைத்தன.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், நான்காவது பந்தியில் உள்ள விடயங்களை நீக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியது.
சிறிலங்காவில் இடம்பெற்றுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு தீர்மான வரைவின் மொழிநடை மென்மைப்படுத்தப்பட வேண்டும் என்று ரஷ்யப் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சிறிலங்கா முன்வைத்துள்ள திருத்தங்கள் குறித்து தீர்மான வரைவை முன்வைத்துள்ள அனுசரணையாளர்கள் சாதகமாக பார்க்க வேண்டும் என்று சீனா தெரிவித்தது.
சிறிலங்காவில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் விடயத்தில் முன்கூட்டியே தீர்மானிப்பது குறித்து பேரவை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சீனப் பிரதிநிதி தெரிவித்தார்.
அதேவேளை, கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை உள்ளடக்கிய தீர்மான வரைவின் 4ஆவது பந்தியை, நீக்குவதற்கு, சுவிற்சர்லாந்து, நோர்வே, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டன.
இந்த தீர்மான வரைவில், 4ஆவது, 5ஆவது, 17ஆவது செயற்பாட்டுப் பந்திகள் தான், முக்கியமானதாக இருக்கின்றன என்று சுவிஸ் பிரதிநிதி குறிப்பிட்டார்.
அதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைக்கு அமைய, சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை அமைக்கும் வகையில், 4ஆவது பந்தியை இன்னும் வலிமையானதாக்க வேண்டும் என்று நோர்வே பிரதிநிதி வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment