போரினால் பல பாதிப்புக்களை பெண்களே அனுபவித்து வருகின்றனர். கணவனை இழந்தும் அங்கவீனமாகியும் காணாமல் போயும் பெண்
தலைமைத்துவக் குடும்பங்களாகவும் என்றும் பெண்களே பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர் என யாழ்.மாவட்டத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், எம்மினப் பெண்களை மனரீதியாக விடுவிக்க வேண்டிய கட்டாயத் தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.தேசியத்தின் பால் அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகுமெனவும் இது அமைந்துள்ளது.
பெண்களைப் பலவீனப்படுத்துவதனூடாக அவளைத் துஸ்பிரயோகம் செய்யவும் சீண்டவும் பொருளாதாரத்தை முடக்கி தம்முடன் பேரம் பேசும் சக்தியாக மாற்றுவதற்கு பலர் முனைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சின்னச் சின்ன ஆசைகளை ஊட்டி அவர்களின் எதிர்காலக் கனவுகளை சிதைத்து விடவும் தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தவும் சிலர் துணிகின்றனர்.
அந்த வகையில் எம் பெண்கள் கடந்து வந்த கால அவலங்களிலிருந்து மீண்டு வர வேண்டிய தேவை இப்பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment