நான் அவளை அடித்தேன்…. உண்மைதான் சேர்…… அன்று காலை ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே அவளை நான் அடித்தேன்……
அவளது அடிவயிற்றிலும் முதுகிலும் பல அடிகள் விழுந்தன…. அவ்வாறு தாக்கி அவளை தள்ளிவிட்ட போது அவள் கட்டிலிலே மேல் நோக்கி பார்த்தவாறு விழுந்தாள்……. சேர்……. விழுந்தவள் மீண்டும் எழவே இல்லை…… இதுதான் சேர் நடந்தது……”கடந்த ஜூலை 29ம் திகதி புதன்கிழமை புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் பயணப் பொதியில் அடைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த 34 வயதான ஆர்.கார்த்திகாவின் காதலன் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதியே அது.
44 வயதுடைய யாழ். நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான கார்த்திகாவின் காதலன் பெட்ரிக் சின்னராசா கடந்த ஆகஸ்ட் 05ம் திகதி புதன்கிழமையன்று மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாந்தை மேற்கு இலுப்பைக்கடவை கோவில் குளத்தில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு விசேட விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
இதன் போது ‘புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்’ குறித்த அனைத்து மர்மங்களும் துலக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் நேரடிக் கண்கானிப்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
கடந்த ஜூலை 29 ஆம் திகதி முற்பகல் 9.30 மணியளவில் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் 3 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி உயரம் கொண்ட கறுப்பு நிற பயணப் பெட்டியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அந்த சடலம் யாருடையது என்பதை அடையாளம் கண்டுகொள்ள பொலிஸாருக்கு சுமார் 24 மணி நேரம் தேவைப்பட்டது.
சடலம் மீட்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே விசாரணைகள் புறக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தே மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண பொலிஸார் ஊடகங்களின் உதவியைப் பெற்றுக் கொண்டனர்.
இதன்பலன் மறுநாள் அதாவது ஜூலை 30ம் திகதி வியாழக்கிழமை பொலிஸாருக்கு சடலம் குறித்த முதல் தகவல் கிடைத்திருந்தது.
சேர் ஊடகங்களில் அடையாளம் காண்பதற்காக பிரசுரிக்கப்பட்டுள்ள படத்திலுள்ள பெண் எமது லொட்ஜில் தான் தங்கியிருந்தார்’ என புறக்கோட்டை செட்டியார் தெருவிலுள்ள லொட்ஜ் ஒன்றின் முகாமையாளர் தொலைபேசியில் தெரிவிக்க லொட்ஜூக்கு படையெடுத்த பொலிஸார் அங்கு பதிவு புத்தகத்தில் இருந்து முதலில் தகவல் பெற்றனர்.
பின்னர் அந்த லொட்ஜின் சீ.சீ.ரீ.வி கண்காணிப்பு கமரா பதிவுகளையும் பொலிஸார் பெற்று பரிசோதித்தனர். அத்துடன் அவர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் அறையை குற்றப்பிரதேசமாக பிரகடனம் செய்து பொலிஸ் தடயவியல் பிரிவினரும் அழைக்கப்பட்டு தடயங்கள் தேடப்பட்டன.
இந்நிலையில் லொட்ஜில் இருந்த பதிவு புத்தகத்தில் பதிவாகியிருந்த முகவரி, அடையாள அட்டை இலக்கத்தை வைத்து பெட்டிக்குள் சடலமாக இருந்த பெண் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஆர். கார்த்திகா என்பதை பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் விசாரணைகளில் கார்த்திகா கல்யாணமாகி ஏழு வயது மகளின் தாய் என்றும் கணவன் 2010ம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து வருவதும் தெரியவந்தது.
இதனைவிட கார்த்திகாவின் மகள் கார்த்திகாவின் தாயாரின் அரவணைப்பில் இருப்பதும் கடந்த 3 வருடங்களாக கார்த்திகா கொழும்பிலேயே வசித்து வருவதாகவும் பொலிஸார் தகவல்களைப் பெற்றுக் கொண்ட போது விசாரணைகள் பல கோணங்களை நோக்கி நகர்த்தப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜூலை 31ம் திகதி வெள்ளியன்று கொழும்பை வந்தடைந்த கார்த்திகாவின் தாயார் தனது மகளின் சடலத்தை அடையாளம் காட்டியதை அடுத்து பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
எனினும் அந்த பரிசோதனைகளில் மரணத்துக்கான காரணம் துல்லியமாக கண்டறியப்படாத நிலையில் சடலத்தின் பாகங்கள் மேலதிக ஆய்வுக்கு எடுக்கப்பட்டதன் பின்னர் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தாயிடம் கையளிக்கப்பட்டது. எனினும் ஏழ்மை காரணமாக அரச செலவிலேயே இறுதிக் கிரியைகள் இடம்பெற்றிருந்தன.
சடலம் தொடர்பான நடவடிக்கைகள் அவ்வாறு ஒரு புறமிருக்க சீ.சீ.ரீ.வி.கமரா பதிவுகளை கார்த்திகாவின் தாயாரான கலைவாணி அமல்ராசனிடம் காண்பித்து விசாரணைக்கான தகவல்களை பொலிஸார் சேகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகே முன்னிலையில் மரண விசாரணைகள் இடம்பெற்ற போது கார்த்திகாவின் தாயார் இப்படி சாட்சியமளித்தார்.
எனக்கு இரு மகள்மார் உள்ளனர். இங்கு இறந்திருப்பவர் எனது மூத்த மகள். அவருக்கு 33 வயதாகிறது. அவள் 2003ம் ஆண்டு கொக்குவிலை சேர்ந்த அருமைராசா ரங்கன் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு பிள்ளையும் உள்ளது.
மகளின் கணவர் மதுவுக்கு அடிமையானவர். அதனால் நித்தம் பிரச்சினையேற்பட்டது. அதன் எதிரொலியாக எனது மகளை விட்டு அவர் பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்றார்.
இந்நிலையில் எனது மகள் 2011ம் ஆண்டு கிருஷ்ணா என அறியப்படும் நபருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர். சில வருடங்களுக்கு முன் மகளுடன் காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டவர் கொழும்புக்கு சென்றார். அவர் மகளை அங்கு வருமாறு பின்னர் அழைத்தார். கிருஷ்ணாவின் உண்மை பெயர்/ முழுப் பெயர் அவரது முகவரி என எதுவும் எனக்குத் தெரியாது.
மகள் என்னுடன் இறுதியாக கடந்த ஜூலை 28ம் திகதி கதைத்தார். தொலைபேசியிலேயே அவர் கதைத்தார். அம்மா நான் தங்க சங்கிலி ஒன்றினையும் தங்க மோதிரம் ஒன்றினையும் செய்து கொண்டேன். இப்போது எனது பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என அவர் என்னிடம் கூறினார்.
மகளின் சடலம் இருந்த பெட்டியை ஒருவர் தூக்கிச் செல்வதை சீ.சீ.ரீ.வி பதிவுகளில் பார்த்தேன். அந்தப் புகைப்படங்கள் ஊடாக அவ்வாறு தூக்கிச் செல்பவர் கிருஷ்ணா என்பதை நான் அடையாளம் கண்டேன் என நீதிவான் திலின கமகே முன்னிலையில் கார்த்திகாவின் தாயார் சாட்சியமளித்திருந்தார்.
இந்நிலையில் தான் கொழும்பு குற்றத் தடுப்புப் பொலிஸார் மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தினர்.
அதாவது கார்த்திகாவும் அவரை கொலை செய்ததாக நம்பப்படும் நபரும் இரகசிய காதல் தொடர்பினை பேணி வந்திருப்பதே அதுவாகும்.
அதனை விட செட்டியார் தெரு லொட்ஜிற்கு அவர்கள் கடந்த ஜூலை 22ம் திகதியே வந்துள்ளதும் வரும் போது கேஸ் அடுப்பு, சமையலறை உபகரணங்கள், பலசரக்கு பொருட்களையும் அவர்கள் கொண்டுவந்துள்ளமையும் ஒரு நாளைக்கு 700 ரூபா என்ற வாடகை அடிப்படையிலேயே அவர்கள் தங்கியிருந்துள்ளமை தொடர்பிலும் பொலிஸார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
அப்படியானால் 22ம் திகதிக்கு முன்னர் அவர்கள் எங்கிருந்தனர் என பொலிஸார் தேடிய போது ஆமர் வீதி, கந்தானை உள்ளிட்ட இடங்களில் அவர்கள் வாடகைக்கு இருந்துள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தகவல்களை வைத்துக் கொண்டு குற்றத் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழு சீ.சீ.ரீ.வி ஊடாக அடையாளம் கண்ட நபரை சல்லடை போட்டு தேடியது.
தலைநகர் கொழும்பிலுள்ள 127க்கு மேற்பட்ட சீ.சீ.ரீ.வி கமராக்களின் உதவியும் இதன் போது பெற்றுக் கொள்ளப்பட்டது. அத்துடன் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தை ஒருவாறு கண்டறிந்து அதனூடாகவும் விசாரணைகள் இடம்பெற்றன.
அதன் பலனாக குறித்த சந்தேக நபர் கொழும்பில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவு அவரைத் தேடி வடக்கிற்கு படையெடுத்தது.
அங்கு சென்ற பொலிஸார் முதலில் யாழ். நல்லூர் பகுதிக்கு சென்று விசாரித்த போதும் பயன் ஏதும் கிடைக்காமையால் வவுனியாவிலும் தகவல் சேகரித்தனர்.
இந்நிலையில் தான் மன்னார் கோவில் குளத்தில் சந்தேக நபர் மேசன் வேலை செய்வதாக குற்றத் தடுப்பு பொலிஸ் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து செயற்பட்ட விசேட பொலிஸ் குழு வேலை செய்துகொண்டிருக்கும் போதே அவரை கையும் மெய்யுமாக பிடித்தது.
குறித்த நபரை கைது செய்த நிலையில் அவர் 44 வயதுடைய பெட்ரிக் சின்னராசா என்ற இயற்பெயரை உடையவர் என்பதையும் அவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதையும் கண்டறிந்த பொலிஸார் கிருஷ்ணா என்பது அவரே என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 5ம் திகதி புதனன்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் அன்றைய தினமே கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதுடன் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டார்.
இதன் போது மேலும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலத்தை சுருக்கமாக நாம் தருகிறோம்.
“சேர்…. சம்பவம் இடம்பெற்ற தினம் எங்கள் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது தொடரவே அவளை நான் அடித்தேன். நான் அடித்த அடி அவளது அடிவயிற்றையும் முதுகையும் பலமுறை பதம் பார்த்தது. அடித்தவாறே நான் அவளை தள்ளிவிட்ட போது அவள் கட்டிலில் விழுந்தாள்.
சுமார் ஒரு மணி நேரம் வரை அவள் அசைவற்று கிடந்தாள். அதனால் அவள் உயிரிழந்து விட்டதை நான் உணர்ந்தேன். சடலத்தை பெட்டியில் போட்டு வவுனியா கொண்டு செல்லும் நோக்கோடு தனியார் பஸ் நிலையத்துக்கு சென்றேன்.
நான் மூன்று வருடமாக கார்த்திகாவுடன் ஒன்றாக வாழ்ந்துள்ளேன். ஆமர் வீதி, கந்தானை பிரதேசங்களில் நாம் வசித்துள்ளோம்.
கந்தானையில் கோழிப் பண்ணை ஒன்றில் வேலை செய்த போது எங்களுக்கு ஒரு குழந்தை ராகம வைத்தியசாலையில் பிறந்தது. அந்த குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு நாம் தப்பிச் சென்றோம்.
அதன் பின்னர் திவுலப்பிட்டி பிரதேசத்தில் ஒரு பண்ணையில் இருவரும் தங்கியிருந்து வேலை செய்தோம். இந்நிலையில் திவுலபிட்டி பண்ணையில் ஏற்பட்ட சிறு பிரச்சினையால் அங்கிருந்து நாம் இருவரும் மீண்டும் கடந்த ஜூன் 22ம் திகதி கொழும்பு வந்து செட்டியார் தெருவில் உள்ள லொட்ஜில் தங்கினோம்.
அங்கு நாம் இருவரும் சந்தோசமாக இருந்தோம். இந்நிலையில் கையில் இருந்த காசு அனைத்தும் செலவானது. அதனால் மீண்டும் திவுலப்பிட்டி பண்ணைக்கு போக நான் அவளை அழைத்தேன். அவள் மறுத்தாள். வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இந்த சம்பவம் இடம்பெறும் போது நேரம் காலை 6.00 மணி இருக்கும்.
வாய்த்தர்க்கம் முற்றவே நான் அவளை அடித்து தள்ளி விட்டேன். எனது அடி அவளது அடி வயிறு முதுகை பதம் பார்க்கவே கட்டில் மீது அவள் மயக்கமுற்று விழுந்தாள்.
கட்டிலில் விழுந்த அவளிடமிருந்து எந்த அசைவும் இருக்கவில்லை. நான் தண்ணீர் தெளித்தும் பார்த்தேன் பயனில்லை. அவளது மூச்சு அப்போது நின்றிருந்தது.
அவள் நினைவு திரும்புவாள் என எண்ணி ஒரு மணி நேரம் காத்திருந்தேன். பிரயோசனம் இல்லை. நினைவு திரும்பவில்லை. அவள் இறந்து விட்டதாக நினைத்தேன். அவளது சடலத்தை அவளது பயணப் பெட்டியில் வைத்து வவுனியா கொண்டு செல்ல நினைத்தேன்.
அவளது சடலத்தை பயணப் பொதியில் போட்டு மிக சிரமத்துக்கு மத்தியில் லொட்ஜிலிருந்து முச்சக்கர வண்டிக்கு ஏற்றினேன். முச்சக்கர வண்டியில் சடலத்துடன் கூடிய பெட்டியை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தேன்.
அனுராதபுரம் பஸ் தரிக்கும் இடத்தில் பெட்டியை வைத்துவிட்டு வவுனியா பஸ் தொடர்பில் விசாரித்து வர சென்றேன்.
வவுனியா பஸ் தொடர்பில் விசாரித்து விட்டு பெட்டியை எடுத்துச் செல்லும் நோக்கில் அனுராதபுரம் பஸ் தரிக்கும் இடத்துக்கு வந்தேன்.
அப்போது அந்த இடத்தில் பொலிஸாரும் பொது மக்களும் கூடியிருந்தனர். எனக்கு பயம் ஏற்பட்டது. நான் பெட்டியை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றேன்.
முதலில் வவுனியாவில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு எனது கையில் இருந்த மேலும் இரு பொதிகளுடன் சென்றேன்.
அங்கு வைத்து சிகை அலங்காரங்களையெல்லாம் மாற்றிக் கொண்டு மன்னாரில் உள்ள உறவினர் வீடொன்றுக்குச் சென்றேன். அங்கிருந்தவாறு மேசன் வேலை செய்யும் போதே நீங்கள் கைது செய்தீர்கள்” என சந்தேக நபர் தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் சந்தேக நபரின் வாக்கு மூலமானது நீதிமன்றின் முன்னிலையில் பெறுமதியற்றது என குறிப்பிடும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சாட்சியங்கள் ஊடாக அவ்வாக்குமூலத்தை பொலிஸார் உறுதி செய்ய வேண்டிய தேவையிருப்பதாக சுட்டிக் காட்டினார்.
சன நடமாட்டம் கூடிய புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதன் மர்மத்தை ஒரே வாரத்தில் துலக்கிய பொலிஸார் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இதனைவிட அண்மைக் காலமாக இலங்கையில் பதிவான பல கொலைகளுக்கு தகாத உறவு அல்லது இரகசிய காதல் என்பன காரணமாக உள்ளதை அவதானிக்கும் போது சமூக மட்டத்தில் இன்னும் பாரிய பொறுப்பு உள்ளதை உணர முடிகிறது.
No comments:
Post a Comment