July 22, 2015

முடிவேயில்லாத கறுப்பு ஜுலைகளும்! இடையறாது ஓடும் ஈழத்தமிழர்களின் குருதியும்! - பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை!

ஈழத்தமிழர் வரலாற்றில் பெரும்துயர் சுமந்த, இன்னும் குருதியின் ஈரம் காயாத பக்கங்கள் பலவுண்டு அவற்றுள் 2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட தமிழின அழிப்பு
நடவடிக்கையும, 1983 ஜுலையில் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையும் தமிழர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அழிக்கப்பட முடியாதவை.@
1983 கறுப்பு ஜூலை யை அன்றே சர்வதேச ஊடகங்கள் இதை ஒரு இனப்படுகொலையாக சித்தரித்தது அதே நேரத்தில் அண்மையில் லண்டனில் பேசிய வட மாகாண முதல் அமைச்சர்ச்சர் நீதிபதி சி வி விக்கினேஸ்வரன் அவர்கள் - தந்தை செல்வா அவர்கள் 1974 யிலேயே தமிழ் இனம் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறது என்று கூறினார் என்பதை மீண்டும் எமது நினைவுகளுக்கு கொண்டு வந்தார்.
தாயகத்தில் வட மாகாண சபை முன் வைத்த இனப்படுகொலைக்கான பிரேரணையை சர்வதேசம் எங்கும் கொண்டு செல்ல வேண்டிய கடமை எம்மிடம் இருக்கிறது.
தமிழினத்தை படுகொலை செய்யவேண்டுமென்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகள் இவை என மறுக்கமுடியாத சான்றாதாரங்களோடு நிரூபிக்கப்பட்டவை. ஆயினும் சிங்களப்பேரினவாத அரசு தமிழ்மக்களுக்குத் தனது இரத்தம் தோய்ந்த குரூரமுகத்தையும் வெளியுலகுக்கு 'நல்லிணக்க'முகத்தையும் காட்டி கபடநாடகம் ஆடித் தண்டனையிலிருந்து இதுவரை தப்பித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடவடிக்கைக்குப்; பின்னரும் இனவழிப்பு நடவடிக்கையைத் தொடர்வதில் சிங்களதேசம் தீவிரம் காட்டிவருகின்றது. இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த பின்னரும் தண்டிக்கப்படாத சிங்கள இனவாதவெறி இப்போது இஸ்லாமியத்; தமிழ்ச் சமூகத்தை பலிகொள்ளத் தொடங்கியுள்ளது.
தமிழர் தாயகம் இன்று சிங்கள இனவாத அரசின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. எமது மக்களை ஈவிரக்கமற்ற முறையில் இனப்படுகொலை புரிந்த கொலை வெறியர்கள் படைச் சிப்பாய்கள் என்றபேரில் எமது தாயக மண்ணை ஆக்கிரமித்துச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். காரைநகர் ஊரிக்கிராமத்தில் பச்சிளம் தமிழ்ப் பெண்குழந்தைகள் அங்குமுகாமிட்டிருந்த கடற்படையினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் கொன்றொழிக்கப்பட் வேண்டும் என்பதில் பெருவிருப்புடைய சிங்கள அரசு இவ்வாறான விடயங்களை கண்டுகொள்வதே இல்லை! எமது மக்களைக் கொன்றொழிக்க எசமானர்களின் கட்டளைக்காகக் காத்திருக்கும் கொலைகார ஓநாய்களின் கைகளிலேயே எமது தேசம் இன்று சிறைப்பட்டுக் கிடக்கின்றது.
எமது தேசம் முற்றுமுழுதாக விடுதலைபெற்றால் ஓழிய எமக்கு நிம்மதியான வாழ்வு கிடையாது என்பதை தாயகத்தில் இடம்பெறும் நெஞ்சம் பொறுக்கமுடியாத ஒவ்வொரு சம்பவங்களும் எமக்கு இடித்துரைக்கின்றன. பேரழிவினைத்தொடர்ந்தே வரலாற்றில் பெரும் திருப்பங்களும் நடந்தேறியிருக்கின்றன. மக்களின் இடையறாத முயற்சிகளும் தொடர்போராட்டங்களும்,  சர்வாதிகார அரசுகளைத் தகர்த்தெறிந்து இறுதியில் வெற்றியினைத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். அதனைப் போலவே நம்பிக்கை ஒளிதரும் காலத்தை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கின்றோம்.
சிங்கள இனவாத அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளில் இலட்சக்கணக்கான எமது உறவுகளை நாம் இழந்திருக்கின்றோம். எமது தேசம் விடுதலை பெறுவதே உலகம் அவர்களுக்கு வழங்குகின்ற உண்மையான நீதியாய் இருக்கமுடியும். ஈழத்தில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என சான்றாதாரத்தோடு நிறுவுவதன் மூலம் தேசவிடுதலைக்காக அர்ப்பணிப்போடு உழைப்பதே எமது கடமையுமாகும்
இலங்கைத்தீவில் இருந்து எம்மை அகதியாக ஓடஓட விரட்டிய சிங்கள இனவாத அரசினை நாம் வாழும் எந்த நாட்டிலும் நுழையவிடாதபடி  ஒடஒட விரட்டவேண்டும். இலங்கையில்தான் எமது சுதந்திரத்தைப் நீ பறித்தாய் இலங்கைக்கு வெளியில் எந்த நாட்டிலும் நீ சுதந்திரமாக நடமாட முடியாது என்னும் நிலையினை நாம் உருவாக்கியே தீரவேண்டும்! சர்வதேசத்திலிருந்து சிங்களதேசத்தை தனிமைப்படுத்துவது எங்களது முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.
சிங்கள தேசத்தை நோக்கி சர்வதேசத்தின் பார்வை குவிந்துள்ள இன்றைய காலச்சூழலில் சிங்கள இனவாத அரசின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டக்கூடிய வாய்ப்புக்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
உலகம் முழுவதும் நடைபெறவிருக்கின்ற கறுப்பு ஜுலை நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைவரையும் பங்கேற்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கின்றோம். இனப்படுகொலையில் படுகொலைசெய்யப்பட்ட மக்களை மறந்துவிடுவது என்பது நாமே அவர்களை இன்னொரு தடவை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும்! என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது!
பாரிஸ் நகரில் 1948யில் முதல் முதலாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனத்தை பிரகடனபடுத்திய இடமான TROCADERO   என்ற இடத்தில அமைத்துள்ள மனிதவுரிமை சதுக்கத்தில் வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி காலை 10 மணி முதல் புகைப்பட கண்காட்சியும் மாலை 3 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறும்.
உலகத்தில் இன அழிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே இருக்கின்றன - மனித வுரிமை சாசனத்தை பிரகடனப்படுத்திய நாடுகளே அதை கவனத்தில் எடுக்காது தமது சொந்த நலன்களை காக்கும் சூழலில் எமது மக்களுக்கு எதிராக நடைபெறும் இன அழிப்பை முன் நகர்த்த வேண்டியவர்கள் உலகத்தில் வாழும் அணைத்து தமிழர்களே!
அதே நேரத்தில் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் சிறி லங்காவில் நடைபெற்ற படுகொலை பற்றிய அறிகையை அதை விசாரித்த விசாரணை கமிசன் முன் வைக்க இருப்பதால் - தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வு தேவை என்பதை வலியுறுத்தி குரல் கொடுப்போம் வாருங்கள்.
காலம் : 25/07/2015
நேரம் : கண்காட்சி : 10H00 முதல் பின் மாலை 3H00 மணிக்கு கவனயீர்ப்பு
இடம்: மனிதவுரிமை சதுக்கம் (TROCADERO ) ligne 6-9

ஊடகப்பிரிவு
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
 

No comments:

Post a Comment