July 22, 2015

விநாயகமூர்த்தியை தமது பக்கம் இழுக்கும் சுமந்திரனின் முயற்சியும் தோல்வி!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தபோதும் அவரது உடல் நிலையை காரணம் காட்டி அவரிற்கு இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

அதனால் தனது சார்பாக சட்டத்தரணி ஜனகன் தனபாலசிங்கத்திற்கு வேட்பாளர் நியமனம் வழங்குமாறு விநாயகமூர்த்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்திடம் கேட்டிருந்தார். எனினும் ஜனகனிற்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் நிலைமையை சமாளிக்குமுகமாக தமிழருசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விநாயகமூர்த்தியை நேரில் சந்தித்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும் விநாயகமூர்த்தி அதற்கு மறுத்துவிட்டதாகவும் தெரியவருகிறது.

இதனையடுத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குமாறு விநாயகமூர்த்தியை அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருவதாகவும் அறியவருகிறது. வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரினூடாக விநாயகமூர்த்தியை தமது பக்கம் இழுக்கும் சுமந்திரனின் முயற்சியும் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment