“சர்தேச ரீதியில் எமது பிரச்சினைக்கான தீர்வு நெருங்கிவரும் சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே இந்த தேர்தலில் எமது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டன” என எச்சரித்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,
இவ்விடயத்தில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி நிர்வாகிகள், வடமாகாண உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
“நாம் மீண்டுமொரு சவால் நிறைந்த தேர்தலை எதிர்கொள்கின்றோம். கடந்த காலங்களில் பல தடவைகள் எமது மக்களின் ஜனநாயக பலமான வாக்கின் மூலம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசைகளை வெளிப்படுத்தியிருந்தோம்.
கடந்த காலங்களில் நடந்த எல்லா ஜனாதிபதி தேர்தல்களிலும், வடக்கு மாகாணசபை தேர்தல்களிலும், உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மிக தெளிவாக சர்வதேசத்துக்கு தமிழர்கள் எதிர்பார்க்கும் விடயங்களை எடுத்துரைந்திருந்தனர்.
இப்பொழுது பல்வேறு தரப்புக்கள் எமது மக்களின் வாக்குகளை கூறுபோட்டு எமது அரசியல் ஜனநாயக பலத்தை உடைக்கும் நோக்குடன் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். உள்ளடக்கமற்ற கொள்கைகளை கொண்டு பலர் தமிழ்த் தேசியம் பேசி மக்களை திசைதிருப்பி எமது பேரம்பேசும் தேசிய பலத்தை சிதைக்க திட்டமிடுகின்றனர். இந்த விடயங்களில் எமது மக்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
எமது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் கையில்தான் இந்த பாராளுமன்ற தேர்தலின் வெற்றி தங்கி இருக்கின்றது. இந்த தேர்தலை மக்களின் தேர்தலாக மாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களுக்கே உண்டு. வீடுவீடாக சென்று இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி பணியாற்ற எமது கட்சி நிர்வாகிககள் தயாராக வேண்டும்.
சர்தேச ரீதியில் எமது பிரச்சினைக்கான தீர்வு நெருங்கிவரும் சூழ்நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே இந்த தேர்தலில் எமது மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு பல்வேறு சக்திகள் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டன.
முகவரியற்ற ஊடகங்களில் சமுக வலைத்தளங்களில் தங்கள் விசமத்தனமான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன. செயலூக்கமற்ற பலர் அறைகளுக்குள் இருந்து கொண்டு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து உள்ளடக்கமற்ற ஒன்றை நோக்கி மக்களை தள்ளிவிட முயற்சி செய்கின்றனர்.
எனவே எமது நீண்ட விடுதலை நோக்கிய பயணத்தில் இந்த முறையும் எமது தமிழ்மக்கள் தங்கள் ஜனநாயக பலத்தை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தி மீண்டும் சர்வதேசத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எமது அபிலாசைகளின் உறுதித் தன்மையை அடித்துரைக்கவேண்டும். இதற்கு கட்சி நிர்வாகிகள் கிராமங்களை வழிநடத்தி மக்களை ஒன்றுபட்ட திசையில் பயணிக்க வைத்து வெற்றி பெறவைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி வேட்பாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வேட்பாளர் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி அதிபர் அருந்தவபாலன் உட்பட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment