July 2, 2015

ஈபிடிபி டக்ளஸ் கூட்டமைப்பு பற்றி தயத்தால் இணைந்தவர்களுடன் இணையமுடியாது!

தமிழ் அரசியல் தலைமையில் ஏற்படும் மாற்றமே நிரந்தர தீர்விற்கு வழிகோலுமென தெரிவித்துள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சி இம்முறை வீணை சின்னத்தில் போட்டியிடுவதில் மாற்றமில்லையெனவும்
தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்திருந்த அனைவரிற்கும் சமதளம் நிகழ்ச்சியூடாக தமது கட்சியின் தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது பொதுஜன ஜக்கிய மக்கள் முன்னணி உடைந்துள்ளது. நீங்கள் மைத்திரி அணியா? மஹிந்த அணியா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நாங்கள் இன்று வரை பொதுஜன ஜக்கிய மக்கள் முன்னணியின் பங்காளி கட்சியாகவே இருப்பதாக தெரிவித்ததுடன் நாளை ஜனாதிபதி மைத்திரியினை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் பின்னரே கூட்டு தொடர்பான முடிவிற்கு வரமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

சிலவேளை ஜ.தே.க ஆட்சி அமைத்தால் பங்காளியாவீர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தேர்தல் கூட்டு தொடர்பில் ஜ.தே.க பக்கமிருந்தும் அழைப்புக்கள் வந்திருப்பதாக தெரிவித்தார்.

கூட்டமைப்பு மைத்திரி அரசுடன் இதயங்களால் இணைந்திருப்பதாக கூறுகின்றது. நீங்களும் பங்காளியாக பேச்சுக்கள் நடப்பதாக கூறுகின்றீர்கள். அவ்வாறானால் கூட்டமைப்புடன் இணக்கரீதியில் செயல்படுவீர்களா என எழுப்பபட்ட கேள்விக்கு இதயத்தால் இணைந்தவர்களுடன் ஒருபுறம் இலண்டனில் ரகசிய பேச்சுக்கள் நடக்கின்றன. இன்னொரு புறம் ஜனாதிபதிக்கு தெரியாது பிரதமரிடமும் இன்னொரு புறம் பிரதமரிற்கு தெரியாது ஜனாதிபதியிடமும் மக்களை காட்டி பணம் பெற்றுள்ளார்கள். இவ்வாறெல்லாம் ஒருபுறம் செய்து கொண்டு மறுபுறம் மைத்திரி அரசு ஏமாற்றிவிட்டதாகவும் உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கவில்லையென குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் என்னை மைத்திரி அரசில் இணைத்துக்கொள்ளக்கூடாதென கூட்டமைப்பு பேரம் பேசியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய அரசின் வலி.வடக்கு விடுவிப்பு ஏமாற்று வேலையென தெரிவித்த அவர் ஏற்கனவே மஹிந்த அரசுடன் தான் நடத்திய பேச்சுக்களினையடுத்த விடுவிக்க திட்டமிடப்பட்ட நிலத்தையே மைத்திரி அரசு விடுவித்ததாகவும் அதனாலேயே மக்களிற்கு வழங்கப்பட்ட பத்திரங்களுள் மஹிந்த படம் இருந்ததெனவும் அவர் தெரிவித்தார்.

மக்கள் நிலம் மக்களிற்கே என்பது தமது நிலைப்பாடென தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா முன்னைய சந்திரிகா அரசில் தமது முயற்சியினால் வலி.வடக்கு நிலத்தை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment