July 7, 2015

அனுமதியின்றி வெளிவரும் எம் விளம்பரங்கள் – நிறுத்தப்படாவிடின் சட்ட நடவடிக்கை!

புலம்பெயர் தேசங்களில் மின்னஞ்சல் மூலம் வெளிவரும் அநாமதேய மின்பத்திரிகையொன்று ஈழமுரசு, சங்கதி-24 ஆகியவற்றின் விளம்பரங்களைப் பிரசுரித்திருப்பது எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எந்தவொரு நாட்டிலும் பதிவோ அன்றி முகவரியோ அற்ற குறிப்பிட்ட அநாமதேய மின்பத்திரிகையை நடத்துபவர்கள் எமது அனுமதியின்றியே ஈழமுரசு, சங்கதி-24 ஆகியவற்றின் விளம்பரங்களைப் பிரசுரித்துள்ளார்கள் என்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
ஏனைய ஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டிய தேவை ஈழமுரசு, சங்கதி-24 ஆகியவற்றிற்குக் கிடையாது. இது தொடர்பாக எவருடனும் எச்சந்தர்ப்பத்திலும் நாம் உரையாடல்களை மேற்கொண்டதும் கிடையாது.
இந்நிலையில் எமது ஊடகங்களின் விளம்பரங்களை எமது அனுமதியின்றித் தமது மின்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட மின்பத்திரிகையை நடத்துபவர்கள் வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரிய செய்கையாகும்.
அத்தோடு இது தமது மின்பத்திரிகைக்கு நாம் அனுசரணை வழங்குவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் உள்நோக்கத்தைக் கொண்டது என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.
குறிப்பிட்ட இந்த அநாமதேய மின்பத்திரிகையையும் நாமே நடத்துவதாக குற்றம் சுமத்தியும் கடந்த ஆண்டு எமது ஊடகங்களின் மூத்த ஊடகவியலாளர் மீது கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் சிங்களப் புலனாய்வாளர்களால் படுகொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதோடு, எல்லாளன் படையின் பெயரில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் முக்கிய கருவியாக இனங்காணப்பட்ட நபர் பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவருக்கு பொபினி நீதிமன்றத்தால் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் எமது மூத்த ஊடகவியலாளர் மீதான படுகொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட அவதூறுகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் திட்டமிட்டுக் குறிப்பிட்ட அநாமதேய மின்பத்திரிகையில் எமது ஊடகங்களின் விளம்பரங்கள் இப்பொழுது பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவே நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
எமது அனுமதியின்றி இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட மின்பத்திரிகையை நடத்துபவர்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் இது விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிர்வாகம்
ஈழமுரசு, சங்கதி-24

No comments:

Post a Comment