June 24, 2015

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆசனங்களைக் குறைக்கக் கூடாது – சம்பந்தன்!°

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முறை மாற்றம் குறித்து பேசுவது துரதிர்ஷ்டவசமானது.

தேர்தல் முறை மாற்றம் என்பது அரசியலமைப்பு மறுசீர்திருத்தமாகவே கருதப்படும். அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற ஆளுகையைப் பகிர்ந்தளிப்பதாக இது அமைய வேண்டும். இதற்கான உரிய தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனும் தமது வாக்கிற்குப் பெறுமதி இருக்கிறது என்று உணர வேண்டும். அந்த உறுதிப்பாட்டில் வாக்களிக்க வேண்டும்.

ஒரு வாக்கு தமது எதிர்காலம், நாட்டின் எதிர்காலம் என்பவற்றில் தாக்கம் செலுத்தும் என்பதைக் கருத வேண்டும்.

நாட்டின் இரு பிரதான கட்சிகளாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன உள்ளன. 70 சதவீத சிங்கள மக்கள் இருக்கின்றனர். இவற்றுக்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படும்.

ஆனால் வடக்கு, கிழக்கு, மலையகம், மேற்கு என சிறுபான்மை மக்கள் பிரிந்து வாழ்கின்றனர். அவர்கள் தமது வாக்கை உறுதிப்படுத்த வேண்டும். பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ், முஸ்லிம், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என தமிழ் மக்கள் பரவி வாழ்கின்றனர். இவர்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது முக்கியமானதாகும்.

வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் மக்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சிறுபான்மை மக்கள் கூட்டாக வாக்களித்து தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் அவர்களின் வாக்குக்கு பெறுமதி வழங்கும் வகையிலும், அந்தப் பெறுமதியை அவர்கள் உணரும் வகையிலும் புதிய தேர்தல் முறை அமைய வேண்டும்.

போர் காரணமாக வடக்கிலுள்ள பலர் இடம்பெயர்ந்தும் வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாக்களர்களாகப் பதிவு செய்யப்படவில்லை.

இதில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு 11 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன.

இந்தநிலையில் இன்னும் 20 வருடங்களுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9ஐ விடவும் குறையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை புதிய தேர்தல் முறையில் உள்ளடக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் தேர்தல் மறுசீரமைப்பு குழுவின் தலைவர் தினேஸ் குணவர்த்தன, அதுரலியே ரத்தன தேரர் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனவே, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஆசனக்குறைப்பு ஏற்பட்டு விடக்கூடாது. நாம் முன்வைத்துள்ள இந்த விடயத்துடன் 20 ஆவது திருத்தச் சட்டவரைவு நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment