வீதியில் பெற்றோல் குண்டுகள், கோடரிப்பிடிகள், பொல்லுகள் போன்ற ஆயுதங்களுடன் திரிந்தவர்களுடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை?
இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதி இளஞ்செழியன் கேள்வி அவருக்குப் பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி பெற்றோல் குண்டுகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைதான 10 இளைஞர்களுள் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் உள்ளார்.
இவர்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்த நிலையில் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் விளக்கமறியலில் இருக்கும் பல்கலைக்கழக மாணவன் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் என்பதால் அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என யாழ். மேல்நீதிமன்றில் பிணை மனு கோரப்பட்டது.
பிணை மனுவை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் "வீதியில் ஆயுதமேந்தித் திரிந்த குழுவினருடன் பல்கலைக்கழக மாணவனுக்கு என்ன வேலை" என வினவினார். தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 10 பேரும் பெற்றோல் குண்டுகள், கோடரிப் பிடிகள், பொல்லுகள் போன்ற அபாயகரமான ஆயுதங்களுடன் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே குறித்த மாணவனின் பிணை மனுவை உடனடியாகப் பரிசீலனை செய்து பிணை வழங்க முடியாது எனத் தெரிவித்ததுடன் விசாரணையையும் பிற்போட்டுள்ளார். எனினும் குறித்த மாணவன் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் குறித்து மல்லாகம் நீதிமன்றத்தில் உரிய கட்டளையைப் பெற்றுச் செயற்படுமாறும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment