June 30, 2015

இளம்விதவைப்பெண்களிடம் பாலியல் இலஞ்சம்: கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது ஏ.எவ்.பி!

வடக்கில் இடம்பெற்ற போரால் விதவைகளான பெண்கள் தொழில் தேடும்போது பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்பதுடன் அதற்கு இசையவும் வைக்கப்படுகின்றனர் என ‘ஏ.எவ்.பி.’ செய்திச் சேவை அறிக்கையிட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான பெண்களை மூலங்களாகக் கொண்டு ஏ.எவ்.பி. வெளியிட்டுள்ள அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து புதிய சமூகப் போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. போரால் பல இளம் பெண்கள் விதவைகளாகினர். இவர்கள் வேலைகள் தேடிச் செல்லும்போது பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர். பாலியல் இலஞ்சமாக கோரப்படுகிறது. சில சமயங்களில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என சமூக சேவகர் ஒருவர் குறிப்பிட்டார்.
விதவைகளுக்கு எமது சமூகத்தில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை என சமூக சேவகரான கிறிஸ்டி மனோகரன் கவலையுடன் தெரிவித்தார். ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளுக்காக தங்களை பயன்படுத்த முனைகின்றனர் என 34 வயதான விதவைப் பெண் ஒருவர் தன்னிடம் முறையிட்டார் எனவும் அவர் மேலும் கூறினார்.
பல விதவைப் பெண்களுக்கு நிதி மற்றும் உதவிகளை வழங்குவோர் இவற்றுக்குக் கைமாறாக அப்பெண்களுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்துகின்றனர். அப்பெண்களின் அவல நிலையை அவர்களின் நண்பர்களும் உறவினர்களும்கூட பயன்படுத்த முனைகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தவிர சில பெண்கள் பாலியல் தொழிலுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் விதவைத் திருமணங்களை ஏற்காத சமூகத்தில் இப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என மரியரோசா சிவராசன் என்ற சமூக சேவகி கருத்துத் தெரிவித்தார்.
நடந்த முரண்பாட்டினால் யாழ்ப்பாணத்தில் மட்டும் 27 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment