June 16, 2015

சட்டவிரோதத்தொழிலை நிறுத்தி எம்மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள். முல்லை பிரதிநிதிகள் ரவிகரனிடம் வேண்டுகோள்!

வெட்டுவாய்க்கால் நந்திக்கடலில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்தி தமது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையொன்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
 
தடைசெய்யப்பட்ட வலைகளைக்கொண்டு நந்திக்கடலின் வளத்தை சூறையாடுவதால் நாளாந்த வருமானத்தை வீச்சுத்தொழில் மூலம் நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முல்லை.கரையோரக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,


 
கடந்த 2015-06-12 அன்று மாலை வடமாகாணசபை உறுப்பினர் திரு.து.ரவிகரன் அவர்களின் இல்லத்தில் கள்ளப்பாடு, சிலாவத்தை, மணற்குடியிருப்பு, வண்ணாங்குளம், செல்வபுரம் ஆகிய கரையோர கிராமங்களைச்சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் சிலர் சந்திப்பொன்றை நிகழ்த்தியிருந்தனர்.
 
தொடர்ந்துவரும் சட்டவிரோதிகளின் முறையற்ற மீன்பிடி முறைகளால் ஆண்டாண்டு காலம் வீச்சுத்தொழிலையே நம்பியிருக்கும் தம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதென அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
தடைசெய்யப்பட்ட வலைகளும் கிபிர்கூடு என்று சொல்லப்படும் கூடுகளும் பயன்படுத்தப்பட்டு வெட்டுவாய்க்கால் நந்திக்கடலின் வளம் சூறையாடப்பட்டுவருதலை தடுத்துநிறுத்தப்படவேண்டும். அதன்மூலம் நாளாந்த வருமானத்தைக்கொண்டு தம் வாழ்க்கையை முன்னெடுக்கும் பல்லாயிரக்கணக்கான வீச்சுத்தொழிலாளிகள் மீதான நெருக்கடிகள் களையப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்திருந்தனர்.
 
இவ்வாண்டு ஆண்டுமுழுவதும் தொழில் செய்யக்கூடிய வகையில் இறால்குஞ்சுகள் பெருகியிருப்பதாகவும் நாளாந்தம் இரண்டாயிரம் மூவாயிரம் அளவில் அனைவரும் உழைத்த நிலையில் தற்போது உள்ளூரிலும் வெளியூரிலும் உள்ள சிலர் சட்டவிரோத தொழிலை முன்னெடுப்பதால் வீச்சுத்தொழில் பாதிக்கப்பட்டுவருகிறது. போதியளவு வருமானத்தினை பெறத்தவறும் வீச்சுத்தொழிலாளிகளின் நாளாந்த வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகிறது என தெரிவித்தனர்.
 
மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களைக்கேட்டறிந்த வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள்,
 
நன்னீர் மீன்பிடியானது வடமாகாணசபையின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. சட்டவிரோதத்தொழில் செய்பவர்களை நிறுத்தும் நடவடிக்கையை மாகாண மீன்பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சு முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்துடன் இணைந்து செய்யும். 
எதிர்வரும் மாகாணசபை அமர்விலும் மீன்பிடி நன்னீர்பிடி மீன்பிடி அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்திலும் இது விடயங்களை சமர்ப்பித்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பதற்கு ஆவன செய்வேன் என்றும் அதுவரை பொறுமை காக்கவேண்டும் என்றும் பதிலளித்திருந்தார்.

No comments:

Post a Comment