June 19, 2015

மூன்று கேட்ட மகிந்த தரப்பு: முடியாதென்ற மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு சுதந்திரக்கட்சியினூடாக போட்டியிட அனுமதிக்க வேண்டுமென, ஒரு சிறுகும்பல் அடம்பிடித்து வரும் நிலையில், அண்மையில் சுதந்திரக்கட்சியின் முக்கிய கூட்டம் நடந்தது. இதில் மகிந்தவை
வேட்பாளராக்க முடியாதென மைத்திரி உறுதியாக அறிவித்து விட்டார் என கூறுகிறார் அமைச்சர் ராஜித.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கவேண்டும் இல்லையேல் தேசியப் பட்டியலில் எம்.பி.யாக்கவேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அவருக்கு வேட்பு மனுகொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் நெல்சன் மண்டேலா போன்றவர்களை உருவாக்குவதே நோக்கமாகும். ரொபட் முகாபேயை உருவாக்குவதற்காக நல்லாட்சி உருவாக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இணைப்பை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அறுவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவின் செயற்பாடு எவ்வாறு இருகிறது?
பதில்: அக்குழு நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியது. மேலே குறிப்பிட்ட மூன்று கோரிக்கைகளை அக்குழு முன்வைத்தது. அந்த மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துவிட்டார். ஜனாதிபதியுடன் யாரும் இணைந்துசெயற்படமுடியும். முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முதல் சந்திப்பில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துவிட்டார். அவர் முன்னெடுக்கும் நல்லாட்சியிலிருந்து பின்திரும்ப மாட்டார்.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அப்ப என்னதான் கொடுக்க போகின்றீர்கள்?
பதில்: என்ன கொடுக்கவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினராக்கினோம், அமைச்சராக்கினோம், எதிர்க்கட்சி தலைவராக்கினோம், பிரதமராக்கினோம் இறுதியாக ஜனாதிபதியாக்கினோம். இதற்கு மேல் என்னகொடுக்கவேண்டும்.
கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா?
பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இதயம் பலமானது. அவருக்கு ஆத்மசக்தி இருக்கின்றது.
கேள்வி: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாதான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிளை பிளவு படுத்திவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் டளஸ் அழகபெரும கூறியுள்ளாரே?
பதில்: அதிகாரம் இல்லாமல் போகும் போது முதுகெலும்பு நிமிரும். இப்பொழுது சந்திரிகாவை பற்றி பேசுகின்றார். இன்னும் சில நாட்களில் மஹிந்த ராஜபக்ஷவை பற்றியும் பேசுவார். ஒருவரின் நடவடிக்கைகளை பார்க்கவேண்டுமாயின் அவருக்கு அதிகாரங்களை கொடுத்து பார்க்கவேண்டும்.
கேள்வி: மஹிந்தவுக்கு வேட்பு மனுகொடுக்க ஏன் பயப்பிடுகின்றீர்கள்?
பதில்: ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியில் நெல்சன் மண்டேலா போன்றவர்களை உருவாக்குவதே நோக்கமாகும். ரொபட் முகாபேயை உருவாக்க முடியாது. இந்த உண்மை தெரியாவிட்டால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்க முடியாது.
கேள்வி: போதைபொருள் விற்போர் மற்றும் குண்டர்கள் பற்றி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
பதில்: அவ்விரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வேட்பு மனுக்கள் கிடைக்காது. போதைபொருள் வர்த்தகர்கள் தொடர்பிலான விவரம் விரைவில் வெளியிடப்படும்.
கேள்வி: புலம்பெயர் தமிழர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எப்படி?
பதில்: புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல அமைப்புகள் இருக்கின்றன. அவ்வமைப்புகளில் பெரும்பாலானவை வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். நாடு பிரிக்கப்படகூடாது என்றே விரும்புகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் சேகரித்த பணத்தை இலங்கைக்கு கொண்டுவந்து யாழ்ப்பாணத்திலேயே தங்களுடைய வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கு அவர்கள் விரும்புகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து யாராவது வந்தால். அவர்களின் பின்னால் தேசிய புலனாய்வு பிரிவு சுத்தும், நிம்மதியாக வடக்குக்கு செல்லமுடியாது ஏழு, எட்டு இடங்களில் இறக்கி ஏற்றி, முழு உடம்பையும் தடவிதான் அனுப்புவார்கள்.
ஆனால், நிலைமை இன்று மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வசித்த எனது நண்பர்களில் பலர் நாட்டுக்கு திரும்பி, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் ஆய்வு கூடங்களையும் நிறுவியுள்ளனர்.
கேள்வி: மஹிந்த இன்றி வெற்றியடையமுடியுமா?
பதில்: ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டி காட்டினோம். அடுத்த தேர்தலிலும் நாங்கள் தோற்கமாட்டோம். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர்களான ரட்னசிறி விக்கிரமநாயக்க, தி.மு ஜயரத்ன ஆகியோர் கட்சியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வேலையை செய்யாமல் சந்திக்கு சந்தி கூட்டம் நடத்தினால் எப்படி?
கேள்வி: சு.க உறுப்பினர்கள் தனித்தனியாக ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துகின்றனரே? ஏன்? தலைமைக்கு கட்டுப்படுவதில்லையோ?

பதில்: கட்சியில் குழப்பகாரர்கள் இருக்கதான் செய்கின்றார்கள் என்றார். 

No comments:

Post a Comment