எமது இனத்தை அமைதியாக சிதைக்கின்ற ஒரு போருக்குள் நாங்கள் இருக்கின்றோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு
இடம்பெற்ற சமய அறிவு, நாவன்மை, பண்ணிசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் கடந்த கடந்த மாதம் 15ம்நாள் சிறப்பாக இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எமது தமிழ் இளைஞர்களின் சிந்தனை செயற்பாடு ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு மாற்றங்களையும் தமிழினத்துக்கான புதிய வழிகளையும் தந்துள்ளது. எமது தடங்களை நோக்குகின்றபோது இளைஞர்களின் எழுச்சியின் பின்னான ஒரு வரலாற்றுக் காலத்தில் தான் நாம் இருக்கின்றோம்.
வரலாற்றில் எமது இளைய சமுதாயத்தின் சிந்தனை இன்று பூமியில் எங்கள் முகவரியை அறியச்செய்துள்ளது. இன்று நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எமது இனத்தை அமைதியாக சிதைக்கின்ற ஒரு போருக்குள் இருக்கின்றோம். எமது கலாச்சாரமும் பண்பாடும் எம்மை அறியாமலே எம்மை விட்டு தள்ளிப்போகின்ற நிலையிலும் இருக்கின்றோம்.
இந்த நிலையில் இன்றும் எங்களுக்குள் இப்படியான நல்ல சிந்தனையுடன் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் செயற்படுவது ஆரோக்கியமானது. முன்னோடியானது. அறநெறி, வரலாறு, கலை, விளையாட்டு என்ற பல்துறைக்குள் நம் இளைஞர்கள் ஈடுபடுவது வரவேற்புக்கு உரியது.
மது போதை சமூகச் சீரழிவுகளுக்குள் சிக்குண்டு நமது இளைஞர்களின் எதிர்காலம் வீணாவதை ஆலயங்களின் சூழலில் முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய நல்ல காரியங்கள் தடுத்து நிறுத்தும் என்பதில் ஐயமில்லை என்றார்.
இந் நிகழ்வின் ஆசியுரையினை ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ ஜெயக்குமாரக் குருக்கள் வழங்க வாழ்த்துரையினை ஆலய தர்மகர்த்தா சபை தலைவர் அ. உதயசூரியர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment