April 9, 2015

ஆந்திராவில் நடந்த நெஞ்சை உருக்கும், தமிழர் படுகொலை ( வீடியோ, படங்கள் இணைப்பு)!

ஆந்திராவில் உயிருடன் எரிக்கப்பட்ட பின்னரே சுட்டுக்
கொல்லப்பட்டனர் தமிழர் - அதிர்ச்சி வீடியோ

ஆந்திர தெலுங்கு காவல் துறையினரால் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னர் , தமிழர்களின் முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டு தீயிடப்பட்டிருக்கின்றது.

உயிருடன் முகங்களில் பெற்றோல் ஊற்றப்பட்டு தீயிடப்பட்டு சித்திரவதை செயப்பட்ட பின்னரே அவர்கள் துப்பாக்கிகளால் சுடப்பட்டிருக்கின்றார்கள்.

முகங்களில் தீயிட்டு கொளுத்தப்பட்டதினால், பல தமிழர்கள் முன்னரே இறந்து இருக்கலாம், அதன் பின்னரே துப்பாக்கியால் சுடப்பட்டிருகின்றார்கள்

இதே வேளை ஆந்திரமாநில காவல்த்துறை தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ!!!

தமிழர்களை சுட்டுக் கொன்றது எப்படி என்பது பற்றி சிறப்பு படை போலீஸ் டி.ஐ.ஜி. காந்தாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 4�ந் தேதி (சனிக்கிழமை) மாலையில் 500�க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரம் வெட்டுவதற்காக ஆந்திர காடுகளில் புகுந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி இருந்து செம்மரகட்டைகளை வெட்டினார்கள். அவர்கள் காடுகளில் கும்பல் கும்பலாக ஆங்காங்கே குவிந்திருந்தனர்.

திருப்பதி அருகே சித்தூரில் சந்திரகிரி மண்டல பகுதியில் உள்ள சீகடிகோணை பகுதியில் 150 பேர் கொண்ட கும்பல் செம்மர கட்டைகள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தது.

பின்னர் அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள ஈத குண்டா பகுதியில் மேலும் 150 பேர் கொண்ட கும்பல் செம்மரகட்டைகளை வெட்டிக் கொண்டிருந்தனர். மற்றொரு இடத்தில் 30 பேர் கொண்ட கும்பல் செம்மரக் கட்டைகளை வெட்டியது.

இதற்கிடையே செம்மர கட்டைகளை வெட்டுவதாக தகவல் கிடைத்ததும் எனது தலைமையில் சிறப்பு படையினர் அங்கு விரைந்தோம். எங்கள் குழுவில் 10 பேர் கொண்ட வனத்துறை ஊழியர்களும், 14 பேர் கொண்ட சிறப்பு படை போலீசாரும் இடம் பெற்றிருந்தனர்.

செம்மர கடத்தல் கும்பல் இருக்கும் சீகடிகோணை என்ற இடத்தை அடைந்த போது அங்கு ஒரு இடத்தில் 150 பேர் இருந்தனர். நாங்கள் 24 பேர்களே இருந்தோம். அதிகாலை 4½ மணிக்கு பவுர்ணமி நிலா வெளிச்சம் அதிகமாக இருந்ததால் காட்டில் எத்தனை பேர் கொண்ட கும்பல் இருந்தது என்பதை எங்களால் நன்றாக பார்க்க முடிந்தது.

முதலில் செம்மர கடத்தல் கும்பலை சரண் அடையுமாறு நான் எச்சரிக்கை செய்தேன். நாங்கள் குறைவான பேரே சென்றதால் அந்த கும்பல் எங்களை கண்டு பயப்பட வில்லை. மாறாக எங்களை தாக்க தொடங்கினார்கள். செம்மர கடத்தல் கும்பலில் உள்ளவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தனர். கற்களையும் ஆங்காங்கே குவித்து வைத்திருந்தனர்.

எங்களை நோக்கி அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். நாட்டு துப்பாக்கியாலும் சுட்டனர். அவர்கள் தாக்கிய படியே எங்களை நோக்கி முன்னேறி வந்தனர். இதனால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 11 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

மேலும் ஈதகுண்டா பகுதியிலும் தங்கியிருந்த மற்றொரு கும்பல் மீதும் துப்பாக்கி சூடு நடத்தினோம். இதில் 9 பேர் பலியானார்கள். செம்மர கடத்தல் கும்பல் எங்களை தாக்க வந்ததால் தற்காப்புக்காக நாங்கள் சுட வேண்டியதாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட இடத்தில் செம்மரமே கிடையாது: ஆந்திர எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி, 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வாசு ரெட்டி வர்மா கூறியதாவது:�

20 தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 500 பேர் செம்மரம் வெட்ட வந்ததாக போலீசார் கூறுகிறார்கள். இவர்கள் வரும் போதே போலீசார் ஆந்திர எல்லையில், செக்போஸ்டுகளில் தடுத்து நிறுத்தாதது ஏன்? இந்த கொலை, ஆந்திர முதல் மந்திரி சந்திர பாபு நாயுடுவின் நேரடி ஏற்பாட்டில் நடந்து இருக்கிறது.

சந்திரபாபு நாயுடு ஒரு நாளைக்கு முன்பே திருப்பதி வந்து விட்டார். மறுநாள் இரவு 8.30 மணி வரை அங்கு இருந்திருக்கிறார். அவரது ஆலோசனையின் பேரில் தொழிலாளர்களை கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது உத்தரவின் பேரிலேயே போலீசார் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

ஆந்திரமாநில உள்துறை மந்திரி, ‘மரம் வெட்டிய தொழிலாளர்கள் ஆயுதங்களால் தாக்கியதாகவும், சுட்டதாகவும் பதிலுக்கு போலீசார் சுட்டதாகவும் கூறி இருக்கிறார். இதற்கு அவர் ஆதாரத்தை காட்ட முடியுமா? என்கவுண்டர் எப்படி நடந்தது என்பதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதனால் அவர்கள் நம்மை பகையாளி போல் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதற்கான முழுபொறுப்பையும் சந்திரபாபு நாயுடு ஏற்க வேண்டும்.

இது போலி என்கவுண்டர் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தற்போதைய ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்.

ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:�

தமிழக கூலி தொழிலாளர்களை முதலிலேயே கைது செய்து இரவில் அங்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் கைகளை கட்டி சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். 20 தொழிலாளர்களும் மார்பில் குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் அனைவரும் மல்லாக்காக படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஆய்வின் போது இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கடத்தல் காரர்கள், ஏஜெண்டுகள் யாரும் கைது செய்யப்பட வில்லை. அப்பாவி தொழிலாளர்களை திட்டமிட்டு கொலை செய்திருக்கிறார்கள். இது கண்டனத்துக்குரியது. நீதி விசாரணை தேவை.

மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் மது:�

தமிழகத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது விதிமீறல். கடத்தல்காரர்களை விட்டு விட்டனர். ஏஜெண்டுகள் கைதாகவில்லை. கூலி தொழிலாளர்களை பிடித்துச் சென்று பலியாக்கி இருக்கிறார்கள்.

இது மனித உரிமை மீறல் இறந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

பி.வி.சி.எல். அமைப்பு செயலாளர் சுரேஷ்:�

ஆந்திராவில் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடத்திருக்கிறது. தொழிலாளர்கள் இறந்து கிடந்த இடம் செம்மரம் எதுவும் இல்லாத மைதானம்.

தொழிலாளர்களை சுட்டுக் கொன்று அந்த இடத்தில் போட்டு இருக்கிறார்கள். அவர்கள் அருகே கிடந்த செம்மரகட்டைகள் அப்போது வெட்டப்பட்டவை அல்ல. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பழைய கட்டைகள். அழைத்துச் சென்று கொன்று விட்டு போலீசார் நாடகமாடி இருக்கிறார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது. மனிதாபிமானம் இல்லாத செயல்.



No comments:

Post a Comment