February 15, 2015

இலங்கை அரசு சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிசேனாவை பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் - தி.வேல்முருகன்!

இந்தியாவுக்கு வருகை தரும் சிறிசேனாவிடம் தமிழீழ வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஏற்று சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்று இந்தியப் பேரரசு வலியுறுத்த வேண்டும். ஐ.நா. தீர்மானத்தை
ஒத்திவைக்கும் சிங்களத்தின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தருகிறார். சிறிசேனவின் இந்த பயணத்தின் நோக்கமே ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு போர்க்குற்ற விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யாமல் ஒத்திப்போட வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைத் திரட்டுவதுதான் என்று கூறப்படுகிறது. 

இலங்கையில் ஈழத் தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனவும் அவரது அரசும் அதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழக்கமான சிங்களப் பேரினவாத புத்தியை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் இருந்து சிங்கள ராணுவத்தை விலக்க மறுத்த சிறிசேன அரசு தற்போது கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சிங்களப் பேரினவாத அரசின் இந்த கபடவேடத்தை உணர்ந்ததாலேயே தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையில் 'இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே' என்றும் இதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாண சபையின் இந்த தீர்மானத்தால் சிங்களப் பேரினவாதம் நடுநடுங்கிப் போய் அலறிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் சிறிசேனா இன்று இந்தியாவுக்கு வந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோர இருக்கிறார். சிங்களத்தின் இந்த கபடநாடகத்துக்கு இந்திய மத்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதே தாய் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும். 

இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனையோடு இருப்பதாக கூறும் இந்தியப் பேரரசு, ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்ற வடக்கு மாகாண சபையின் ஒருமித்த நீதி கோருகிற தீர்மானத்தை முழுமையாக ஏற்று சிங்கள அதிபர் சிறிசேனா முன்வைக்கிற கோரிக்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும். அத்துடன் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு சிங்களப் பேரினவாத அரசு ஒத்துழைத்தாக வேண்டும் என்ற நெருக்கடியையும் அழுத்தத்தையும் சிறிசேனாவுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை; உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற கொள்கையோடு சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோருவதற்காக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சரமரவீரா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாகத்தான் சிறிசேனவும் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி சர்வதேசம் தடை செய்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அழித்த கொடுங்கோலன் ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளான தங்களது சிங்களப் பங்காளிகளை காப்பாற்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது சிறிசேன அரசு. தமிழீழத் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காரணத்தினால்தான் இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவும் தெரிவித்திருந்தன.

இந்த நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறோம். தங்களுடைய சுய பிராந்திய நலன்களுக்காக சர்வதேச நாடுகள் சிங்களப் பேரினவாதத்தின் இந்த நரித்தனத்துக்கு உடந்தையாகிப் போனால், இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச கூண்டிலே நிறுத்த வகை செய்கிற நடவடிக்கைகளை கைவிட்டு இதற்கான விசாரணையை கொலைகாரர்கள் கையிலேயே கொடுத்தால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட எங்களது ஒன்றை லட்சம் தமிழர் படுகொலைக்கான நீதியை நாங்கள் எங்கே பெறுவது? என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற தமிழினத்தின் ஒற்றை கேள்வியாகும்.

மேலும் இதுவரை ஈழத் தமிழர்கள் மீது நீங்கள் காட்டிய கரிசனையும் அக்கறையும் பொய்யானதுதானா? எங்களுக்கான நீதியை எங்கே போய் கேட்பது? எங்களுக்கான நீதியை எங்களுக்கான வழியில்தான் பெற வேண்டும் என்கிற நிலையை உருவாக்கத்தான் இந்த சர்வதேச சமூகம் விரும்புகிறதா? என்ற கேள்வியையும் தமிழினம் முன்வைக்கிறது. 

ஆகையால் இந்தியாவுக்கு வருகை தரும் சிறிசேனாவிடம் தமிழீழ வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஏற்று சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்று இந்தியப் பேரரசு வலியுறுத்த வேண்டும். நாங்கள் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று இந்தியாவின் அங்கமாக இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழுவையும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழினத்தின் இத்தகைய எதிர்ப்பார்ப்புகளையும் வேண்டுகோளையும் புறந்தள்ளி கடந்த கால காங்கிரஸ் அரசைப் போல மீண்டும் மீண்டும் சிங்களத்தின் சதிகளுக்கு இந்தியப் பேரரசு உடந்தையாக இருந்தால் மகிந்த ராஜபக்சே, சிறிசேனாக்களை விட எங்களது இந்தியப் பேரரசைத்தான் தமிழகம் மிகக் கடுமையாக எதிர்க்கும். தமிழ்நாட்டின் மிகக் கடுமையான போராட்டங்களைத்தான் இந்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வேல்முருகன் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment