April 5, 2015

முள்ளிவாய்க்கால் ’சீடி’ வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுதலை !


இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் அடங்கிய அரசுக் கெதிரான இன வாத உணர்வுகளை தூண்டுகின்ற இறுவட்டுக்களை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம்
பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் நீதிமன்றால் அந்தக் குற்றச்சாட்டி லிருந்து விடுவிக்கப்பட்டார்.
குறித்த இளைஞருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது. அதன்போதே நீதிமன்றம் மேற்படி தீர்ப்பை வழங்கியது.
2011ஆம் ஆண்டு ஆவணி மாதம் பதினெட்டாம் திகதி யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் அமைந்துள்ள இறுவட்டு விற்பனை செய்யும் கடையயான்றில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பான காட்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விற்பனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் கடை உரிமையாளரான தமிழ் இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத் திய பொலிஸார் அவருக்கெதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர். குறித்த இளைஞர் தனக் கெதிரான குற்றச்சாட்டை மறுத்தார்.
தனது கடையில் இருந்தபோது அங்கு இறுவட்டு ஒன்றுடன் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் அவ் இறுவட்டை தான் விற்பனை செய்ததாக தெரிவித்து கடையை சோதனை செய்தனர்.
எனினும் சோதனை நடவடிக்கையின் போது எதுவித இறுவட்டுகளும் தனது கடையிலிருந்து கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.
அதையடுத்து இந்த வழக்கு விளக்கத்துக்கு நியமிக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட உபபொலிஸ் பரிசோதர்கள் நீதிமன்றில் சாட்சியமளித்திருந்தனர்.
இளைஞர் சார்பாக அவரது சாட்சியம் மட்டும் அவரது சட்டத்தரணியால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது. நீதவான் பெ.சிவகுமார் தனது தீர்ப்பில் பொலிஸார் இறுவட்டுக்களை தாம் கைப்பற்றியிருந்தனரே தவிர அதனை நிரூபிப்பதற்கு நிபுணத்துவ சாட்சிகள் எதனையும் மன்றில் முற்படுத்தவில்லை.
அத்துடன் எதிரிக் கெதிரான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்துக்கப்பால் நிரூபிப்பதற்கு வழக்குத்தொடருநர் தவறி விட்டனர் என்று தெரிவித்து குறித்த குற்றாட்டுகளிலிருந்து அந்த இளைஞரை விடுவித்தார்.

No comments:

Post a Comment