April 15, 2015

தமிழின அழிப்பு நினைவு நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 6 வது வருட நினைவு மாத நிகழ்வுகள் - கனடா

கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை பல்வேறு அமைப்புக்களையும், மக்களையும் ஒருங்கமைத்து எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது (NCCT) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது.

மே 16, 2015 சனிக்கிழமை காலை 10 மணி: குருதிக்கொடை: பெர்ச்மௌண்ட் எக்ளிண்டன் சந்திப்பிற்கு அருகில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அன்று எம் மக்கள் குருதிக் கடலில் குளித்த கொடுமையின் நினைவாக இந்த குருதிக் கொடை நிகழ்வை கனடியத் தமிழர் தேசிய அவையினர் (NCCT) நடாத்துகின்றனர். அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

மே 17, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி: மண்வாசனை: மிடில்ஃபில்ட் கொலிஜியெட் மண்டபத்தில் நடை பெற உள்ளது. முள்ளிவாய்க்கால் கோர இனப்படுகொலையின் வெறியாட்டத்தில் உயிர் தப்பி இன்றளவும் வாழ்வை நிமிர்த்தி வாழ முடியாமல் பரிதவிக்கும் எங்கள் மண்ணின் மக்களின் வாழ்வாதார அவலங்களை போக்கும் முகமாக நடைபெறும் இந் நிகழ்வில் அனைத்து அன்புறவுகளும் கலந்து எம் தாயக உறவுகளுக்கு கை கொடுத்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மே 18, 2015 திங்கள் மாலை 5 மணி: தமிழின அழிப்பு நினைவு நாள்: முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையை நினைவு கூறும் தமிழின அழிப்பு நினைவு நாள் ஸ்கார்புரொ டவுன் சென்டறிற்கு அருகில் உள்ள ஆல்பர்ட் கம்பெல் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. கனடா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் எம் இனத்தின் பேரிழப்பின் வலியை சுமந்து வாழும் தமிழினமாக ஒற்றுமையாக இந்த பெரும் நிகழ்வில் பங்கேற்று பேரெழுச்சி நிகழ்வாக வரலாற்றில் தடம் பதிக்கும் நினைவு நாளாக அணிதிரண்டு எழுகை கொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவையினர் வேண்டுகின்றனர்.

2009 மே மாதம் தாயகத்தில் எம் மக்கள் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் எம் மக்களைக் காக்க உலக அரங்கெங்கும் வீதி வீதியாக தமிழர்கள் உலக தேசங்களிடம் எம் மக்களை காக்க வேண்டிப் பல போராட்டங்களை செய்தார்கள். எப்படியாவது எம் மக்களை காக்க யாரேனும் உதவ மாட்டார்களா என்று எதிர்பார்ப்பில் அன்று கனடிய மண்ணில் பல்வேறு தெரு முனைகளில் நின்றும் எம் கனடியத் தமிழர்களும் போராடினார்கள்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை. கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு.

காலம் காலமாக தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்பு வரலாற்றின் உச்சக்கட்டமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் சுமார் எழுபதினாயிரத்திற்கும் அதிகமான எம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காணாமல் போக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் படுகாயமுற்றார்கள்.

கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு இலங்கை அரசு நடாத்திய தமிழினப்படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது.

மறுக்கப்பட்ட எம் மக்களின் நீதிக்காக இன்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் சர்வதேச அரசியல் நகர்வுகளூடாக போராடி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு ஆரம்பம்!

சர்வதேசமயப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.


கனடியத் தமிழர் சமூகம், மாணவர் சமூகம்

மேலதிக தொடர்புகளுக்கு: 416-830-7703

No comments:

Post a Comment