
உணவுப்பாதுகாப்பை கூட்டுறவு அமைப்புகளுக்கு ஊடாக உறுதி செய்யும் நோக்கிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று நேற்று சனிக்கிழமை (28.02.2015) யாழ் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கூட்டத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சரிடம் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கில் கூட்டுறவுத்துறை கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது. எமது மக்கள் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கக்கூடிய கூட்டுறவு அமைப்;புகளை உருவாக்கித் தங்களது பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றி வந்துள்ளார்கள். கூட்டுறவுச் சங்கங்களினது இலாப வருவாய்க்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையில் ஒருவித சமநிலை பேணப்பட்டு, கூட்டுறவும் சமூகமும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சி பெற்றிருந்தன. எமது வெங்காயச் செய்கையாளர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை உருவாக்கி அச்சுவேலியில் தங்களுக்கென சொந்தக் கட்டிடம் ஒன்றையே நிறுவினார்கள். ஆனால் அந்தச் சங்கக் கட்டிடத்தில் இன்று அடாத்தாக இராணுவமே நிலை கொண்டிருக்கிறது. எமது மக்களுக்குச் சொந்தமான வளமான விவசாய நிலங்களிலும் இராணுவமே பயிர் செய்து கொண்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குக் காலத்துக்கு காலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதிக விளைச்சலைத் தரக்கூடிய பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் இவற்றை எல்லாம் எங்களால் செய்ய முடியாத விதத்தில் எமது மாகாண அமைச்சுக்குச் சொந்தமான வட்டக்கச்சி விதை உற்பத்தி பண்ணையிலும், இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையத்திலும், வவுனியாவில் உள்ள தாய்த்தாவர பண்ணையிலும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து எல்லாம் இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ் பாலிகக்கார, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் வ.மதுமதி ஆகியோரும் பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.

No comments:
Post a Comment