February 15, 2015

தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது: ஜனாதிபதி உறுதி என்கிறார் மனோ கணேசன்!

இன்றைய தேர்தல் முறைக்கு சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது ஒருபோதும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகமாக அமைந்து விடக்கூடாது.
தேர்தல் மூலம் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், சட்டவிரோத வன்முறை சார்ந்த வழிமுறைகளை நாடும் நிலைமைக்கு சிறுபான்மை பிரிவினர் தள்ளப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்ததாவது,
ஆம், இந்த கருத்தை ஜனாதிபதி மிகத்தெளிவாக தெரிவித்தார். "நூறு நாள் வேலைத்திட்டத்திற்குள் இன்றைய தேர்தல் முறை மாற்றப்படும் யோசனையும் உள்ளது.
இந்த காலவரையறைக்குள் அது நடைமுறை படுத்த முடியுமா என்ற ஒரு சிக்கலும் இருக்கிறது. எனினும் இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தாலும், அது சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகம் விளைவித்துவிடக்கூடாது" என்று ஜனாதிபதி சொன்னார்.
ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு, அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு மாற்றப்படும் போது, தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் ஸ்திர தன்மையை சீர்குலைத்துவிடும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதி நிசாந்த வர்ணசிங்க கூறிய கருத்தை அடுத்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது, இடைமறித்த ஜனாதிபதி இவ்விதம் கூறினார்.
இன்றைய தேர்தல் முறை மாற்றப்பட்டு புதிய தேர்தல் முறை கொண்டு வரப்பட்டால், புதிய தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே கடந்த கால தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே உத்தேசிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவோம் என்று நந்தன குணதிலக்க கூறினார்.
பழைய தேர்தல் தொகுதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பட முடியாது.
உண்மையில் நாங்கள் தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறை திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அது இன்னமும் மாற்றப்பட வேண்டும்.
சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு முழுமையான உத்தரவாதம் இல்லாத எந்த ஒரு முறையும் தேசிய ஐக்கியத்துக்கு பாதகமானது என நான் இடைமறித்து கூறினேன்.
தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறை திட்டத்தை தாமும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல்முறை சிங்கள மக்களை பெருவாரியாக பிரதிநிதித்துவம் செய்யும் பெரிய கட்சிகளுக்கும், வடக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் ஒருவேளை சாதகமாக அமையலாம்.
ஆனால், இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் புதிய தேர்தல்முறை மிகவும் பாதகமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அப்போது தெரிவித்தார்.
"அப்படியானால் நாட்டின் ஸ்திரதன்மையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட முடியாத நிலைமை ஏற்படலாம்" என்று அப்போது இடைமறித்து கூறிய ஜனாதிபதி மேலும் "எது எப்படியிருந்தாலும், உத்தேச தேர்தல் முறை மாற்றம் ஒருபோதும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகம் விளைவித்துவிடக்கூடாது" என்று கூறினார்.

No comments:

Post a Comment