September 9, 2014

ஐ.நாவில் மகிந்த பேசுவதை கண்டித்து சென்னையில் ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து, நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவான். ஐ.நா. வின் மனித உரிமை ஆணையம், மார்ட்டி அட்டிசோரி உள்ளிட்ட மூவர் விசாரணைக் குழுவை அறிவித்தது. ஆனால், ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு ராஜபக்சே கொக்கரிக்கிறான்.
ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச அனுமதிக்கக் கூடாது ஐ.நா. மன்றம் அமைத்த விசாரணைக் குழுவை இந்தியாவில் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்திலும், புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளிலும் நடத்தப்பட வேண்டும்.
சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிறையில் வதைபடும் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு நாளும் கேடு செய்யும் சிங்கள அரசின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி, பொருளாளர் டாக்டர் இரா. மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் நாளை (செப்டெம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணி அளவில், சென்னை, வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
08.09.2014 மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment