வவுனியா மாவட்டத்தில் படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் இதுவரை 30 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வவுனியா உதவி பிரதேச செயலாளர் எஸ்.கர்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமையில் இன்று இடம்பெற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பிரதேசத்தில் படை தேவைகளுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பிலும், அது தொடர்பாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதன்போது வினவியதைத் தொடர்ந்து வவுனியா உதவி பிரதேச செயலாளர் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.
வவுனியா நகரில் காவல்துறை நிலையத்திற்காகவும், பூங்கா வீதியில் விசேட அதிரடிப் படையினருக்காகவும், பட்டானிச்சூர் புளியங்குளத்தில் படை தேவைக்காகவும், மூன்று முறிப்பு கிராம சேவைகர் பிரிவில் படை நலன்புரி நிலையத்திற்காகவும் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா உதவி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தவிர படை மற்றும் விமானப் படையினர் தலைமைப் பீடத்திற்காக 240 ஏக்கர் காணியும் மற்றுமொரு படைப்பிரிவுக்காக 38 ஏக்கர் தனியார் காணியும் சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்காக 28 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதனைத் தவிர வவுனியா வடக்கு, பேயாடிகூழாங்குளம், மகாரம்பைக்குளம், காத்தார் சின்னக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு படையினரின் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக இன்றைய கூட்டத்தின்போது வவுனியா உதவி பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு அபிவிருத்திக் குழுக் கூட்டத் தலைவர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்
No comments:
Post a Comment