பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைiயில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, “சிறிய அரசு, சிறந்த நிர்வாகம்” என்ற குறிக்கோளுடன் குடியரசுத்
தலைவர் உரையில் முன் வைத்துள்ள திட்டங்கள் புதிய விடியலுக்கு கட்டியங்கூறும் வகையில் அமைந்து இருக்கின்றன.
கடந்த பத்து ஆண்டு காலம் சீர்குலைந்து கிடந்த பொருளாதாரத்தை செம்மைப் படுத்தவும், பண வீக்கத்தைக் குறைக்கவும் குடியரசுத் தலைவர் உரையில் உறுதி கூறப்பட்டுள்ளது. இதனால் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும். ஊழல் ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடுவது வரவேற்கத் தக்கது.
நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு செயல் வடிவம் தருவதும், அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதும், நீர் பாதுகாப்பை உறுதி செய்திட பிரதமரின் சிறப்பு முன்னுரிமைத் திட்டம் உருவாக்குதல் போன்றவை பாராட்டத் தகுந்த அறிவிப்புகள் ஆகும்.
தரிசு நிலங்களை மேம்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரித்து உணவுப் பற்றாக்குறையை போக்குதல், விவசாயிகள் தற்கொலைகளைத் தடுத்தல், ஊரகப் பகுதிகளில் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்க ஆவண செய்தல் நரேந்திர மோடி அரசின் உடனடி செயல் திட்டங்களாகும்.
மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளம் உருவாக்கப்படும். கல்வித் துறையில் இணையதள தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்துதல், அனைத்து மாநிலங்களிலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களை அமைத்தல் போன்ற அறிவிப்புகள் சிறப்புக்குரியவை மட்டுமல்ல, இன்றைய அவசியத் தேவையும் ஆகும்.
சிறுபான்மை மக்களுக்கு சமத்துவ உரிமைகள் மற்றும் மதராசாக்களை நவீனப்படுத்துதல் போன்றவை மூலம் சிறுபான்மையினரின் நலன் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சமூகத்தின் பலவீனமான நலிந்த பிரிவினர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்புகள் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு சமூக நீதியை நிலைநாட்டும்.
இளைஞர்களின் தொழில் திறன்களை பயன்படுத்திக் கொண்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு, பெண்கள் பாதுகாப்புக்கு உத்திரவாதம், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வித் திட்டம் போன்ற அறிவிப்புகள் சமூக மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும்.
புதிய சுகாதாரக் கொள்கை, மக்கள் உடல்நலத்தை பேணும் வகையில் தேசிய காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்குதல் போன்றவை மக்கள் நல்வாழ்வை உறுதி செய்யும் திட்டங்கள் ஆகும்.
நவீன கட்டமைப்பு வசதிகள் கொண்ட நூறு நகரங்களை ஏற்படுத்துதல், அதிவேக விரைவு இரயில் திட்டத்தைச் செயல்படுத்த, ‘வைர நாற்காரத் திட்டம்’, விமான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் சிறிய நகரங்களையும் இணைத்து சிறிய ரக விமான நிலையங்கள் அமைத்தல், நாடு முழுவதும் தொழில் பூங்காக்களை அமைத்தல் போன்றவை நாட்டின் வேகமான அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு வித்திடும் அறிவிப்புகள் ஆகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தெளிவான, உறுதியான செயல்பாடு போன்றவை மிளிரும் குடியரசுத் தலைவர் உரையை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன்.
No comments:
Post a Comment