தமிழின அழிப்புக்கான சர்வதேச சுயாதீன விசாரணை, ஐநா சபையின் தலைமையில் சர்வஜன வாக்கெடுப்பு- தமிழ்நாடு அரசு முன்வைத்த பிரேரணையை வலியுறுத்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் நீதிக்கான ஒன்று கூடல்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
செல்வி ஜெயலலிதா தலமையிலான தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர்களுக்கு நீதியான தீர்வு வேண்டி பிரேரணைகளை நிறைவேற்றி இருந்ததை நாம் எல்லோரும் அறிவோம். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த பிரேரணைகளை மதிக்காமல், அதை கவனத்தில் கூட எடுக்காமல், சிறிலங்கா அரசுக்கு துணையாக இருந்ததைநாம் அறிவோம்.
இந்தியாவில் திரு நரேந்திர மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின், ஜூன் 3 ஆம் திகதி டெல்லியில் பிரதம மந்திரியை சந்தித்த செல்வி ஜெயலலிதா, அவரிடம் கையளித்த பிரேரணையில் - ஈழத் தமிழர்களுக்கு நீதியான தீர்வுக்கு இந்தியா முன்னிற்க வேண்டும் என்றும் ஐநா சபையில் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இன அழிப்பை விசாரணை செய்யும் முகமாக ஒரு தீர்மானத்தை இந்தியா முன் வைக்க வேண்டும் என்றும், தமிழீழ மக்களிடையே - ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் தமிழீழத்தை வலியுறுத்திசர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் .
ஈழத்தமிழர்களின் விடுதலை வேண்டி திரு நரேந்திர மோடியிடம் கையளிக்கப்பட்ட இந்த பிரேரணையை, ஈழத்தமிழர்களாகிய நாமும் அதை வலியுறுத்த வேண்டிய கடமை உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் ஆகிய எமக்கும் உண்டு,அத்துடன் இந்த பிரேரணையை கருத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு நிரந்த அரசியல் தீர்வுக்கு இன்று ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு இந்த பிரேரணையை வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நாம் அனைவரும் நாம் வாழும் நாடுகளில் இந்திய தூதரகம் முன் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வாய் எமது அரசியல் அபிலாசையை இந்திய அரசிடம் தெரிவிப்போம்.
ஜூன் மாதம் தமிழ் நாட்டு மாநில அரசின் வேண்டுகோளை வலியுறுத்தி எதிர்வரும் 18.06.2014 அன்று நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், ஜெர்மனி, பிரான்சு,இத்தாலி, நோர்வே, கனடா, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் பல நாடுகளில் இந்திய தூதரகம் முன் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்களும், சந்திப்புகளும் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றும் தமிழக மாணவர்கள் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல்களில் குறிப்பிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்களை இந்திய தூதரகம் முன் ஒன்றுகூடி தமிழ்நாட்டு அரசின் பிரேரணைக்கும், அதன் மூலம் எமது விடுதலைக்கும் வலுசேர்க்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை
No comments:
Post a Comment