May 27, 2014

டெல்லியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட வைகோ உள்ளிட்ட தொண்டர்கள் கைது!

டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட ம.தி.மு.க. தொண்டர்கள் 400பேர்வரையில் கைது
செய்யப்பட்டுள்ளார்கள் (இரண்டாம் இணைப்பு)
பிரதமர் மோடி பதவி எற்பு விழாவில் பங்கேற்க சார்க் நாட்டு தலைவர் என்ற அடிப்படையில் ராஜபக்சே அழைக்கப்பட்டார். இதற்கு பா.ஜனதா கூட்டணியை சேர்ந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜபக்சேவை அழைக்க கூடாது என்று பா.ஜனதா தலைவர் ராஜநாத்சிங்கை சந்தித்து வைகோ கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை இந்த நிலையில் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் தனது தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்து இருந்தார். இதற்காக அவர் தொண்டர்களுடன் டெல்லி சென்றார்.
இன்று காலை 11 மணி அளவில் ஜந்தர் மந்திரில் வைகோ தனது ஆர்ப்பாட்டத்தை தொடங்கினார். இதில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினர் வக்கீல் தேவதாஸ், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜீவன், ம.தி.மு.க. இணைய தள ஒருங்கிணைப்பானர் மின்னல் முகமது அலி உள்பட ம.தி.மு.க. தொண்டர்கள், தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் பலர் கறுப்பு கொடியுடன் கலந்து கொண்டனர்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற கூண்டில் நிறுத்தி, மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சேவை அழைத்ததை கண்டிக்கிறோம். எரிகிறது எரிகிறது தமிழர் நெஞ்சம் எரிகிறது போன்ற 30 கோஷங்களை அவர்கள் முழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசினார். இறுதியில் வைகோவை போலீசார் கைது செய்தனர். வைகோ உட்பட 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு வீரர் பகத்சிங் அடைக்கப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

No comments:

Post a Comment