May 7, 2014

தாயகத்திலும் தென்னிலங்கையிலும் கடும் மழை குளங்களின் வான்கதவுகள் திறப்பு மக்கள் பெரும் பாதிப்பு!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழர் தாயகம்
முழுவதும் கடும் மழை பொழிந்து வருகின்றது. வடக்கில் கடந்த பல மாதங்களுக்கு பின்னர் மழை பொழிந்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை, தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கின்ற மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக, வன்னியிலும் யாழ்.மாவட்டத்திலும் அண்மையில் அண்மையில் மீள்குடியேறிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஓலைக் குடிசைகளுக்குள்ளும் தறப்பாள் குடில்களுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் அவர்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வடபகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவில் பருவ மழை பெய்யாததால் விவசாய நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக பெரும்போக நெற்செய்கையும் சிறுபோகச் செய்கையும் அழிவடைந்தன. இதனைத் தொடர்ந்து வடக்கில் கடும் வெப்பம் வாட்டி வதைத்தது. வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் ஆலயங்களில் மழை வேண்டி யாகங்கள் செய்ததுடன் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்த மழை கொட்டித் தீர்த்து வருகின்றது.
இதேவேளை, தென்னிலங்கையிலும் மழை கொட்டித் தீர்ப்பதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன. புத்தளம் மாவட்டத்தின் தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்த்தேக்கங்களின் தலா நான்கு வான் கதவுகளும் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக புத்தளம் மன்னார் வீதியின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வீதியின் எலுவாங்குளம் பகுதியை அண்மித்த பகுதி நீரில் முற்றாக மூழ்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்துச் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர்த்தேக்கங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதேவேளை நவகத்தேகம பிரதேசத்தின் சில பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. -

No comments:

Post a Comment