யார் எதை செய்தாலும் அது தமிழை வளர்ப்பதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது கலை,கலாசர, பண்பாட்டு கோலங்களை அவை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்’ என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை (21) நடைபெற்ற வடமாகாண கலைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் அதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாங்கள் இங்கே தமிழ் என்ற பெயரிலே பல குழுக்களை வைத்திருக்கின்றோம் இங்கே ஒரு தமிழ், சங்கம் அங்கே ஒரு தமிழ் கூட்டுறவு சங்கம், அது இன்னாருடைய தமிழ் சங்கம், இது இன்னாருடைய தமிழ் சங்கம் என இருக்கிறது. அது இருக்கலாம்.
இது சுதந்திரமான நாடு. ஒவ்வொருவரும் தமக்குரிய பணியை செய்யலாம். அதில் ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
கூட்டாக ஒரு முயற்சியை மேற்கொள்வதன் மூலம் தமிழை வளர்ப்பதற்கான நல்லதொரு முடிவை எட்டலாம்.
எங்கள் மக்களுக்கு தெளிவு படுத்துவதன் மூலம் பிற்காலத்திலே எமது கலைகளை பேணிப்பாதுகாக்க அது உதவும்’ என நம்புகின்றேன்.
அத்துடன் ஆடிப்பிறப்பென்றால் என்ன? அதற்கு என்ன செய்யலாம்? அதனுடைய வரலாற்று பின்னணி என்ன? சமய பின்னணி என்ன? கலை கலாசார பின்னணி என்ன? பண்பாட்டு விழுமிய பின்னணி என்ன? என்பவை பற்றி பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
இந்த ஆடிப்பிறப்பை நாங்கள் ஏன் கொண்டாடுகிறோம் இந்த ஆடிப்பிறப்பின் போது இந்த ஆடிக் கூழை நாங்கள் ஏன் காய்ச்சி உண்ணுகின்றோம் என்பதை எங்களுடைய குழந்தைகள் தெரிந்து கொள்ளவேண்டும். இவற்றுக்கான சிறிய வேலைத்திட்டத்தை செய்ய எண்ணியிருக்கின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment