May 12, 2014

சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் அரசு சாட்சிகள் சேகரிப்பு!

சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் நாட்டு அரச வழக்கறிஞர்கள் சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள். ஈழத்தமிழர்கள் மீது
முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது சர்வதேசப் போர்ச் சட்ட விதிமுறைகளை மீறி, மாநிடத்துக்கு எதிரான பாரிய குற்றங்களை சிறீலங்கா பேரினவாத அரசு இழைத்திருந்தது. 

இந்த மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா அரச உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் ஆகியவற்றுக்கு எதிராக சாட்சிகளைப் பதிவுசெய்வதற்காக தற்போது யேர்மன் அரசாங்கம் தனது அரசதரப்பு சட்டத்தரணிகள் மற்றும் மனிதவுரிமை அமைப்புகள் ஆகியவற்றின் ஊடாகப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிர்தப்பி யேர்மனுக்குப் புலம்பெயர்ந்து வந்திருக்கும் ஈழத்தமிழர்களிடம் நேரடிச் சாட்சிகளைச் சேகரித்துவருகிறது. 

இதன் அடிப்படையில் சிறீலங்கா அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சியில் யேர்மன் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் இந்த வேலைத்திட்டத்தை செம்மையாக முன்னெடுப்பதற்காக யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையால் சாட்சிகள் வழங்குவோருக்கான பாதுகாப்பும் இரகசியமும் பேணப்பட்டு,  குறித்த மனிதவுரிமை அமைப்பு மற்றும் சட்டத்தரணிகளோடு தொடர்புகளையும் சந்திப்புக்களையும் ஏற்படுத்தும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. 

அத்துடன், சாட்சிகளை வழங்கும் எமது உறவுகளுக்கான இதர ஒத்துளைப்புக்களையும் வசதிகளையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை செய்துவருகிறது. 

இனவழிப்பில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா அரச தரப்புகளுக்கு எதிராக சரியான முறையில் சாட்சிகள் அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் யேர்மனிக்குப் பயணம் செய்யும் சிறீலங்கா அரச அதிகாரிகள் பாரதூரமான சட்டச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

ஏற்கனவே யேர்மனியின் முன்னாள் துணைத்தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பல்வேறு சட்ட ரீதியான அழுத்தங்கள் தாங்கமுடியாமல் நாட்டுக்குத் திரும்பிச் சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆகவே, எமது இனத்தை அழித்துவரும் சிறீலங்கா அரச தரப்புக்கு எதிராகத் தங்களது நேரடிச் சாட்சிகளையும் சான்றுகளையும் வழங்கத் தயாராக இருக்கும் எமது உறவுகள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்: 

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை:info@vetd.org

No comments:

Post a Comment