கடந்த 18ஆம் நாளன்று இலண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நினைவெழுச்சி நாளில் தமிழீழ தேசியக் கொடியை ஏற்ற மறுத்து பிரித்தானிய தமிழர் பேரவை அரங்கேற்றிய நாசகார சூழ்ச்சி நடவடிக்கையை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அம்பலப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
'அன்பான தமிழ் உறவுகளே
தனிப்பட்ட யாரையாவது குறை கூறின் அது அவரவர் பிரச்சனையென விட்டுவிடலாம். அவரவர் தமது தர்மத்திற்கேற்ப முடிவையுமெடுக்கலாம். ஆனால் ஒரு அமைப்பைச் சார்ந்தோரெனத் தேர்ந்து குறை கூறின் பதிலளிக்கவேண்டிய நிலையும் பொறுப்பும் அந்த அமைப்பிற்குளது. அந்தவொரு காரணத்தினாலேயே இதனை எழுதுகின்றோம். ஆனால், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC) ஈழத் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றையே தம்மூச்சாகக் கொண்டுள்ள மக்கள் அணி. தமிழீழத் தேசியக்கொடி எமது தேசியச் சின்னங்களில் உன்னத இடத்தை வகிக்கும் ஒன்று. எமது மாவீரர்களின் தியாகத்தினாலே உரமேற்றப்பட்டு வருவது. தேசியத்தலைவரினாலே பூசிக்கப்படுவது. 2009 இலே உலக நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன்னாலே 73 நாட்கள் வரையிலே கவனயீர்ப்பு நிகழ்த்திய வேளையிலே – குறிப்பாகப் பிரித்தானியா போன்ற நாடுகளிலே - இக்கொடியைக் காவற்றுறையினர் எதிர்த்தனர். எமது உறவுகள் அதனைக் கைகளிலே ஏந்துவதற்காகப் பொலிசாரினாலே தாக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்டனர். வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினையும் தமிழீழத் தேசியக் கொடியினையும் வேறுபடுத்துவதெவ்வாறெனவறிந்த காவற்றுறை எமது தேசியக் கொடிக்கு அனுமதி அளித்தது. நாம் மண்டபங்களினுள்ளேயும் அம்பலத்திலேயும் எமது தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலே தேசியக் கொடி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். காவற்றுறையினர் சூழ்ந்துநிற்கப் பிரித்தானிய முன்னணி அரசியற்கட்சி நாடாளுமன்றவுறுப்பினர்களும் எம்மோடிணைந்து மரியாதை செய்ய எமது தேசியக் கொடி உரிய முறையிலே ஏற்றப்படுவதை யாவருமறிவீர். எமது இளைஞரும் யுவதியரும் பல்கலைக்கழகங்களினுள்ளேயும் அவ்வாறே ஏற்றினர்.
முள்ளிவாய்க்காலிலே ஆயிரமாயிரமாய் எமது மக்களும் மாவீரர்களும் தம்மை இக்கொடியின் விடுதலைக்காகவே ஈந்தனர். அவ்வாறான முள்ளிவாய்க்கால் நிகழ்வின் நினைவெழுச்சியின் போது அக்கொடி ஏற்றப்படுவதை எதிர்பார்க்கும் எந்த ஒருவரையும் பிழையானவரென்று யாருங் கருத முடியாது.
இம்முறை நிகழ்ச்சியிலேயும் எமது தேசியக்கொடி ஏற்றப்படமாட்டாது என்ற முடிவிலே பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) உள்ளதாக நாம் அறிந்தோம். எமது ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டபோதும் அவ்வாறே கூறப்பட்டு அவர்கள் அறிக்கையிலுள்ளவாறே நியாயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.
பி. த. பேரவையின் மூவருக்கும் எமக்கும் இடையிலே 21.04.2014 அன்று முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்ச்சி பற்றிய கூட்டம் நடைபெற்றது. அதிலேயும் தேசியக் கொடியின் முக்கியத்துவம் பற்றிக் காரசாரமான வாதம் நடைபெற்றது. எமக்கு அனுமதி தரும் அதே பொலிசார் அவர்களுக்கு அனுமதி மறுப்பது விந்தையாகவுள்ளது என்பதையும் அவ்வாறான தன்மையை நாம் ஒன்றாகச் சென்று அவர்களிடம் நியாயம் கேட்கவேண்டுமென்றும் அவர்களுக்கு எம்மாலே எடுத்துக் கூறப்பட்டது. தொடங்கிய நிலையிலேயே கூட்டம் முடிவடைந்தது. தாம் பி. த. பேரவையின் செயற்குழுவிலே இதுபற்றிக் கதைப்பதாகக் கூறிச் சென்றனர். பின்னர் எவ்வித மாற்றமுமில்லாத முடிவையே அறிவித்தனர்.
பொதுமக்கள் மனநிலையை நன்கறிந்த த. ஒ. குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி. த. பேரவையின் பொறுப்பாளர்களுடன் தொலைபேசிமூலமாக இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார். இறுதியாக மே 16 வெள்ளியன்றும் பி. த. பே. யின் பொறுப்பாளரோடு நிலைமைகளை விரிவாகக் கதைத்துள்ளார். 17ம் திகதி சனியன்று நண்பகல் வரையிலும் இதுபற்றிய ஏற்ற முடிவை எதிர்பார்த்திருந்தோம். எந்நிலையிலும் அவர்கள் தம்முடிவிலே உறுதியாகவிருந்தனர்.
பி. த. பேரவையினரின் ஊடக நிகழ்ச்சிகளின் மூலமாக யாவற்றையுமறிந்த இளைஞர்கள் மிகவும் கவலையடைந்தனர். உண்மை நிலையை அறிய எம்மை நாடினர். யாவும் பி. த. பே. இன் முடிவேயென்பதை அறிந்த அவர்களிலே சிலர் தாமும் அவர்களோடு பேசிப் பார்த்தனர். தம்மை ஏற்ற விடுமாறும் பாதகமான விளைவுகளுக்குத் தாமே பொறுப்பாகுவாரெனவும் கேட்டனர் எனக் கேள்வியுறுகின்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஈற்றிலே விரக்தியுற்ற பொதுமக்கள் தாமே முன்வந்து கொடியேற்ற எண்ணினர்.
மே 18 ஞாயிறன்று இலண்டன் ரவல்கர் சதுக்கத்திலே மக்கள் கூடினர். எமது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வழமையாக வருவது போலவே பொதுமக்கள் பலரும் - அதிலும் குறிப்பாக இளைஞர்கள் - கைகளிலே கொடியேந்தியே வந்தனர். கொடியை ஏற்ற வேண்டுமெனக் குரலெழுப்பி வேண்டினர். அப்போது எமது நிர்வாகப் பொறுப்பாளரும் வேறு சிலரும் பி. த. பே. பொறுப்பாளருக்கு நிலைமையை விளங்கவைத்து ஒத்துப் போகும்படி அறிவுரையும் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர்.
கூடியிருந்த பொதுமக்கள் 45 நிமிடங்கள் வரையிலே மிகமுயன்றனர். ஒருபுறம் கொடியேற்றுவதற்குரிய ஒழுங்குகளையும் செய்தனர். கொடியை ஏற்ற முறையிலே ஏற்ற வேண்டுமென்பது அவர்களின் ஆதங்கம். ஏற்றவேண்டிய முறையை நன்கு அறிந்தவர்கள் த. ஒ. குழுவினரென்பதை அம்மக்களறிவர். அதனாலே உதவி கோரினர். அவர்களின் நியாயமான ஆதங்கத்தை உணர்ந்தவரும் கொடியேற்றும் முறையை அறிந்தவருமான சிலர் அவர்களுக்குச் சரியான முறையைக் காட்டினர். கொடி பொதுமக்களாலே ஏற்றப்பட்டு நிகழ்ச்சியின் நிறைவுவரை பறந்தது.
இதுவே நிகழ்ந்தவை. உள்ளத்திலே நிறைந்தவை இரண்டு – ஒன்று பி. த. பே. இன் நிலை – அடுத்தது இளைஞரின் தேசியம் சார்ந்த செயற்பாடு.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தேசியம் சார்ந்த எந்த நிகழ்ச்சிiயும் ஊக்குவிப்பர் என்பதையும் தேசியக் கொடி ஏற்றுவதற்கான பூரண ஒத்துழைப்பை எந்நேரத்திலும் எவருக்கும் வழங்குவதைத் தமது தார்மீகக் கடமைகளிலே ஒன்றாகக் கொண்டவரென்பதையும் இத்தால் உறுதி செய்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.'
No comments:
Post a Comment