May 20, 2014

யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு அனுப்புவதாகக் கூறி 58 இலட்சம் ரூபாக்கள் மோசடி செய்த இருவர் கைது!(காணொளி உள்ளே)

யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்கு அனுப்புவதாக கூறி ஒரு கோடி 58 லட்சம் ரூபாய் மோசடி செய்த தாயும், மகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதியில் வசித்து வந்த தாயும் மகளுமே பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரியவருகிறது.


பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்த வயோதிப மாது ஒருவரின் மகளும் மருமகனும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலமானதால் அவர்களின் 4 பிள்ளைகளையும் இவரே வளர்த்து வந்துள்ளார்.பின்னர் குடும்ப கஷ்டம் காரணமாக தனது பேரப்பிள்ளைகளை கிளிநொச்சியில் உள்ள ஆச்சிரம் ஒன்றில் சேர்த்துள்ளார்.


இந் நிலையில் ஒரு நாள் குறித்த வயோதிப மாதுவிடம் இன்று கைது செய்யப்பட்ட பெண், வடமாகாண சபை தேர்தலில் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியில் போட்டியிட்ட நபர் ஒருவர் உட்பட சிலர் சென்று நாங்கள் லண்டனில் அநாதை பிள்ளைகளை வைத்து பராமரிக்கும் நிறுவனம் ஒன்றை நடாத்தி வருகின்றோம் அதில் உங்கள் பேரப்பிள்ளைகளையும் சேர்த்து விடுங்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் தயக்கம் காட்டிய போது அவரின் மருமகனின் பெயரைக்கூறி அவரை தமக்கு நன்றாக தெரியும் என்றும் அவரின் பிள்ளைகள் இங்கே வளர்வதை விட லண்டனில் வளர்ந்தால் நன்றாக வளர்வார்கள் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

அதனை நம்பி அந்த பெண் தனது பேரப்பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்ப சம்மதித்தார். அவ்வேளை லண்டனில் உள்ள தங்களின் நிறுவனத்திற்கு வேலைக்கும் ஆட்கள் தேவை உங்களுக்கு தெரிந்த யாராவது இருந்தால் அவர்களையும் நாங்கள் குறைந்த செலவில் லண்டனுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்கள்.

அதனையும் நம்பிய அந்த பெண் தனது இரண்டாவது மகள் அவரது கணவன் அவர்களது 4 பிள்ளைகளையும் தமது அயலவர்கள் உறவினர்கள் என 6 குடும்பத்தை சேர்ந்த 17 பேரை லண்டன் அழைத்து செல்ல அவர்களிடம் குறித்த பெண் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அக் குடும்பங்களிடம் லண்டன் அழைத்து செல்ல ஒருவருக்கு 15 லட்சம் செலவாகும் என கூறி அக் குடும்பங்களிடம் இருந்து மொத்தமாக ஒரு கோடி 58 லட்சம் பணத்தை பெற்றுவிட்டு அக் கும்பல் இவர்களை ஏமாற்ற தொடங்கியது.
அதனை அடுத்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இவர்கள் அக் கும்பலுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்தார்கள். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில் காங்கேசன்துறை பொலிசார் என தொலைபேசி மூலம் கடந்த 3ம் திகதி விசாரணைக்கு என குறித்த வயோதிப மாதுவை அழைத்து இனம் தெரியாத நபர்கள் அவரை கடத்தி சென்று 4 நாட்கள் வைத்திருந்து விட்டு கடந்த 7 ம் திகதி புலோலி இந்து மயானத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரை கைவிட்டு சென்றிருந்தனர்.


அவரை பருத்தித்துறை பொலிசார் மீட்டு கடத்தல் சம்பவம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்தனர். அதன் போது இக் கும்பலே தன்னை கடத்தி கொலை செய்ய முயற்சித்ததாக தான் சந்தேகப்படுவதாகவும் அவர் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இந் நிலையிலையே இன்றைய தினம் அவ் மோசடிக் கும்பலை சேர்ந்த பெண் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வீட்டில் இருப்பது தெரிந்து பாதிக்கப்பட்ட 7 குடும்பமும் அப் பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிசார் அவ் வீட்டில் இருந்த இரு பெண்களையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் பாதிக்கப்பட்டவர்களையும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்ய கூறி சென்றனர்.

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட 7 குடும்பமும் தனித்தனியாக முறைப்பாட்டை பதிவு செய்தனர். அந்த முறைப்பாட்டில் தவமணி என்னும் பெண்ணின் பெயரிலும் பாலசந்திரன் என்பவரின் பெயரிலுமே தாம் வங்கியில் பணத்தை வைப்பிலிட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் இன்று காலை கைது செய்யப்பட்ட இரு பெண்களில் தவமணி என்னும் பெண்ணை தொடர்ந்து தடுத்து வைத்ததுடன் அவரது மகளை விடுதலை செய்தனர். பாலசந்திரன் என்னும் நபரையும் பொலிசார் கைது செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அதேவேளை தவமணி பாலசந்திரன் ஆகிய இருவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிசார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment