May 19, 2014

தமிழின அழிப்பு நாள் மே 18 முள்ளிவாய்க்கால் 5 ம் ஆண்டு நீங்காத நினைவு – பிரான்சு

பிரான்சில் தலைநகரான பாரிசு நகரத்தில் 18.05.02014 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2.00 மணிக்கு தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமாக உள்ள லாச்சப்பல் பகுதியில்
வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டு பேரணியின் ஏற்பாடு ஆரம்பமாகியது.
தமிழீழ தேசியக்கொடி, பிரெஞ்சு தேசியக்கொடி, அதன் பின்னர் கறுப்புக்கொடிகள், முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை சாட்சியங்களாக அடங்கிய பதாதைகள் தாங்கி சரியாக 2.50 மணிக்கு குழந்தைகள், பெரியோர்களும் செல்ல, மூதாளர்கள் அவையைச்சேர்ந்தவர்கள் கைகளில் பூக்களுடன் அதன் பின்னர் தமிழர் கலைபண்பாட்டுக்கழக கலைஞர்கள் முள்வேலிக்கம்பிக்குள் அடைபட்டுள்ள மக்கள் மற்றும் சிங்கள இராணுவம் தமிழீழ மக்களுக்கு செய்யும் கொடுமைகளை காட்சிப்படுத்தலுடன் பாரிசின் பிரதான வழியின் உடாக இப்பேரணி சென்றபோது பல்லாயிரக்கணக்கான பிரெஞ்சு மக்கள், வெளிநாட்டு மக்கள் கவனத்தை ஈர்ந்திருந்தனர்.
தமிழீழ மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, இனப்படுகொலையை 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் தொடரும் சிறீலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாட்டை பிரெஞ்சு மொழியில் ஒவ்வொரு இதயங்களை சென்றடையும் வகையில் இளையவர்கள் ஒலிபெருக்கியில் கூற வீதிகளில் உள்ள விடுதிகளில் உள்ளோர்கள் வெளியிலே வந்து படம் பிடித்ததையும், துண்டுபிரசுரங்களை ஆதரவோடு பெற்றுக்கொண்டதையும், எம்மவர்களால் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்படிவங்களில் தாமாகவே வந்து கையெழுத்திட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
பிரதான வீதிவழியாக சென்ற இப்பேரணி கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் 16.00 மணிக்கு République பிரான்சின் குடியரசு சுதந்திரதேவியின் சிலையின் கீழ் பேரணி சென்றடைந்தது. (2009 ம் ஆண்டு சனவரி மாதம் முதல் மே மாதம் வரை சிங்கள இனவாத அரசின் தமிழன அழிப்பில் இருந்து தமிழீழ மக்களை காப்பாற்றும் படி இரவு பகலாக உண்ணாமறுப்புப்போராட்டம் மற்றும் தொடர்போராட்டங்கள்  நடைபெற்றதோர் இடம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்) இப்பேரணி நிறைவில் சுதந்திரத்தேவி திடலில் வணக்க நிகழ்வும், நினைவு கூரல்களும் நடைபெற்றன.
ஆரம்ப நிகழ்வாக முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நினைவாக அமைக்கப்பட்ட தூபியின் முன்பாக பொதுச்சுடரினை இவிறி மாநகர தமிழ்ச்சங்கத்தலைவரும், தமிழ்ச்சங்களின் கூட்டமைப்பின் 91ம் மாகாணத்தின் ஒருங்கமைப்பாளர் திரு. பாலன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் எதிரியுடன் தீரமுடன் போராடி களத்திலே வீரச்சாவையடைந்த தளபதிகள் போராளிகள், மாவீரத்தெய்வங்களையும், மக்களையும் நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. தமிழின அழிப்பில் உயிர் பறிக்கப்பட்ட நினைவாக அமைக்கப்பட்ட தூபிக்கு முன்பாக ஈகைச்சுடரினை முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பில் உயிர் நீத்த குணரத்தினம் மல்லிகா அவர்களின் சகோதரியும், 03.04.1996ல் வீரச்சாவடைந்த வீரவேங்கை பல்லவி அவர்களினது தாயார் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மலர் வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்கள் உறவுகள் வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர்வணக்கத்தை மக்கள் அனைவரும் ஈகைச்சுடர் ஏற்றி மலர்கொண்டு தமது உறவுகளை இதயத்தில் இருத்தி கண்ணீருடன் கதறியழுது நினைவுகூர்ந்தனர். அரங்க நிகழ்வாக “ முள்ளிவாய்க்கால் 5 ம் ஆண்டு நிகழ்வில் உரையினை தமிழீழ மக்கள் பேரைவயின் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்களும், மற்றும் உறுப்பினராகிய செல்வி. அபிராமி அவர்களும் ஆற்றியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தாயகத்தில் சிங்கள பேரினவாத அரசின் இன்றைய நிலைப்பாட்டை சித்தரித்து தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் மேடைநாடகத்தை செய்திருந்தனர். எத்தனை தடைகள் வரினும், உயிர்ப்பலி ஏற்படினும் வீழமாட்டோம் பீனிக்ஸ் பறவைகளாக மீண்டும் வருவோம் என்று எழுச்சி நடனத்தை செவரோன் மாணவியர்கள் வழங்கிச்சென்றனர். இதனைத்தொடர்ந்து பல வெளிநாட்டவர்கள் வெளிநாட்டு அமைப்பினர் உரையாற்றியிருந்தனர்.
கடந்த 10ம் திகதி முதல் இத்திடலில் உண்ணா மறுப்புப்போராட்டத்தை நடாத்திய மூதாளர்கள் சரியாக 5.30 மணிக்கு குளிர்பாணம் வழங்கி தமது உண்ணாமறுப்புப்போராட்டத்தை நிறைவு செய்து கொள்ள வெளிநாட்டவர்களின் உரைகள் நடைபெற்றன. குறிப்பாக முந்நாள் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினரும், பிரெஞ்சு பாராளுமன்ற தமிழின ஆதரவாளர் குழுவின் தலைவியும், தமிழன ஆதரவாளருமாகிய மதிப்புக்குரிய Mme. Marie George Buffet அவர்களும், மற்றும் கியூபா நாட்டைச்சேர்ந்தவரும், Mouvement du la paix அமைப்பைச் சேர்ந்தவர்களும் Docteur. Hervé Hubert அவர்களும், குர்திஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்களும், மாநகரசபை உதவி முதல்வர்கள் எனப்பலர்  உரைகளையாற்றியிருந்தனர். கடும் வெயிலுக்கு மத்தியில் நடைபெற்ற பேரணியால் சற்று களைப்புடன் காணப்பட்ட மக்களை எழுச்சி படுத்தி கொலம்பஸ் தமிழ்ச்சங்க மாணவிகள் எழுச்சி நடத்தை தந்து உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பைச்சேர்ந்தவர்கள் பிரெஞ்சு மொழியிலும், தமிழிலும் உரை வழங்கியிருந்தனர்.
பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பேச்சாளர் திரு. மோகனதாசன் அவர்கள் உரையாற்றியிருந்தார். எதிர்காலம் எமது கையில் இன்னும் தங்கியிருக்கின்றது. இந்த உலகம் தமிழர்கள் எதையாவது வழங்கவேண்டும், செய்யவேண்டும் என்று நினைக்கின்றது என்றும் நாங்கள் தொடர்ச்சியான முன்னெடுக்கும் சனநாய அரசியல் முன்னெடுப்புக்கள் தான் அது வெற்றியைத்தேடித்தரும் என்றும் காலத்தின் தேவைகருதி நாம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றியும் தெளிவாக உரையாற்றியிருந்தார். 
அதனை தொடர்ந்து அனைவரும் உறுதி மொழி எடுத்திருந்தனர். எத்தனை தடைகள் போட்டாலும், இடர்கள் வந்தாலும் கொண்ட இலட்சியத்தில் குன்றிடாது தேசியத்தலைவன் காட்டியவழியில் சென்று எமது மண்ணை மீட்பதோடு, தமிழினஅழிப்புக்கு நீதிகேட்டும், இனஅழிப்பைச் செய்தவனை நீதியின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரியும், முள்ளிவாய்க்கால் 5 வது ஆண்டில் உறுதி கொள்வோம் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதியுரையுடன் முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு நிகழ்வு நிறைவு பெற்றது.
அன்று காலை10.00 செவரோன் மாநகரத்தில் நாட்டப்பட்ட நினைவுக்கல்லின் முன்பாக வணக்க நிகழ்வுகளும், பிரான்சினதும், மற்றும் தாயக, புலச்செய்திகளையும், எம்மவர்களுடைய ஆக்கங்களை தாங்கி வரும் இதழாக விடியல் என்கின்ற சஞ்சிகை வெளிவரவுள்ளமையும், அதன் முதல் சஞ்சிகை நினைவுக்கல்லின் முன்பாக வெளியிட்டும் வைக்கப்பட்டது. சம நேரத்தில் கிளிச்சி மாநகரத்தில் படுகொலைக்குள்ளான மக்களுக்காகவும், பிரான்சு பட்டினிக்கெதிரான அமைப்பைச்சேர்ந்தவர்களும் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 பேரின் நினைவாக நிறுவப்பட்ட சிலைக்கு முன்பாகவும் வணக்க நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ்விரண்டு நிகழ்வுகளிலும் மாநகர முதல்வர்கள், மாநகரசபையைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டதோடு உரையையும் ஆற்றியிருந்தனர்.
முள்ளவாய்க்கால் 5 வது ஆண்டு மே 18 தமிழின அழிப்பு நாள் என்பது ஒவ்வொரு தமிழர்களுடைய உள்ளங்களை நொருங்கச்செய்த நாட்களாகும். ஈவிரக்கமற்ற ஒரு காட்டுமிராண்டி மக்களையும், இராணுவத்தையும் தன்னகத்தே வைத்திருக்கின்ற ஒரு அரசும், அதன் தலைவர்களும் எவ்வாறு மனிதர்களாக நல்வர்களாக வெளிஉலகிற்கு தம்மைக்காட்டிக் கொண்டு திரிகின்றார்கள் என்பதற்கு சிறீலங்கா அரசும், அதன் கொடுங்கோல் ஆட்சிக்கு துணைபோகின்றவர்களையுமே நாம் பார்க்க முடியும. அன்பையும், அகிம்சையை காட்டிய புத்தபகவானையும், யேசுவையும் பின்பற்றுகின்றவர்களா 21ம் நூற்றாண்டில் இப்படியொரு மனிதப்படுகொலையை நடாத்தினார்கள். இவர்களை நாம் சும்மா விட்டுவிடுவதால் பூமித்தாய்க்கும், தமிழீழத்தாய்க்கும் செய்யும் பெரும் துரோகமாகும். எனவே இவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். அதனை தெரியப்படுத்தும் ஒரு நாளே இந்த தமிழின அழிப்புநாள் அந்த நாளில் வீட்டை விட்டு வராதவர்களும், பங்குபற்றாதவர்களும் சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு கூடவே துணைபோனவர்கள் என்றே பார்க்கப்படும் என்று ஒருதமிழர் உணர்வுடன் தனது மனக்கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment