April 13, 2014

ஈழத்தமிழர் நலன்கள் தொடர்பில் சர்வதேச அரசுகளின் மனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்னும் இன்னும் விசாலம் பெறட்டும்!

நாளை பிறக்கவுள்ள தமிழ் புத்தாண்டு தினத்தை வரவேற்று வெளியிட்டுள்ள
வாழ்த்துச்செய்தியிலேயே வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தமிழினத்தின் விடுதலைப்போராட்டத்தையும், அந்த உன்னத உரிமை போராட்டத்தை நடத்திய தமிழ் மக்களின் மீட்பர்களையும் முள்ளிவாய்க்கால் களப்புக்குள் குறுக்கி, சிறீலங்கா அரசின் வாக்குறுதிகளை நம்பி மூர்ச்சை இழக்கச்செய்த பின்னர் சிறீலங்கா அரசின் நயவஞ்சக ஏமாற்று செயல்கள் பற்றி நல்லதொரு படிப்பினையை கற்றுக்கொண்ட சர்வதேச நாடுகள், இன்று ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தின் தோற்றப்பாடுகளையும், அதன் நியாயப்பாடுகளையும் விளங்கிக்கொள்ளுகின்ற கால மாற்றம் நிகழ்ந்துள்ளது.
சுயமரியாதைக்கும், தனிமனித கௌரவத்துக்கும் மதிப்பளித்து மனித உரிமைகளை பேணுவதில் மிகுந்த அர்ப்பணிப்புடைய சர்வதேச நாடுகளின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களுக்கு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தின் தேவைப்பாடுகளையும், அதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவமும், எமது விடுதலைப்போராட்டத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற மனமாற்றமும் ஏற்பட்டுள்ளமை அளவற்ற மகிழ்ச்சியே.
ஈழத்தமிழர் நலன்கள் தொடர்பில் சர்வதேச அரசுகளின் மனங்களில் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றமானது இன்னும் இன்னும் விசாலம் பெறும் போது, எமது மகிழ்ச்சியும் இன்னும் இன்னும் கூடுதல் இரட்டிப்பு பெறும்.
பேரரசுகளின் இந்த மனமாற்றம் நிச்சயம் வஞ்சிக்கப்பட்ட தமிழ் இனத்துக்கு, கூட்டுச்சதி மூலம் சிதைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு காலாகாலத்துக்கும் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தருவதாக அமையவும், இதுநாள் வரையான இழப்புகள், வலிகளுக்கு மருந்திடுவதாக அமையவும் பிறக்கின்ற தமிழ் புத்தாண்டு வளம் சேர்க்க வேண்டும் என்று தமிழ் மக்கள் நாம் பிரயாசை கொள்கின்றோம்.
மிகப்பெரிய தியாகங்கள், அர்ப்பணிப்புகளுக்குப்பின்னர் இன்று நம் மனங்களில் எழுந்துள்ள நம்பிக்கை ஒளிக்கீற்று மேலும் மேலும் பிரகாசம் பொருந்திய ஒளியாக உயிர்ப்பித்திருக்க, எல்லோருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் உளம் கனிந்த நல்வாழ்த்துகளை பிறந்துள்ள இப்புதிய ஆண்டில் கூறும் வேளை, விடுதலை இலக்கு நோக்கிய எமது பயணத்தில் இன்னும் இன்னும் கடுமையாக பணி செய்வோம் என்று வைராக்கியம் வளர்த்துக்கொள்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment