August 15, 2016

திட்டமிட்ட படுகொலை செஞ்சோலை படுகொலை!ஐங்கரநேசன் !

அப்பாவிப் பள்ளி மாணவர்களிடையே இலங்கை விமானப்படையினர் நடாத்திய விமானத்தாக்குதலில் 61 மாணவர்கள் உயிர்நீத்ததுடன், இந்தச்
சம்பவத்தில் நூற்றுக்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள்.
இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுக் குறித்த விமானத் தாக்குதலை நடாத்தி விட்டு இந்தச் சம்பவத்தை வேறு விதமாகத் திரிவுபடுத்தினார்கள்.
விடுதலைப் புலிகளின் போராளிகள் தான் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என வேண்டுமென்றே பொய்யாகப் பழியைச் சுமத்திக் கொச்சைப்படுத்தினார்கள்.
இதன் மூலமாக எமது சிறுவர்களை இலங்கை அவமானப் படுத்தியுள்ளனர் என வடமாகாண விவசாய கமநல சேவைகள்,கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.
கடந்த-2006 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்-14 ஆம் திகதி இலங்கை விமானப் படையின் மிலேச்சத்தனமான விமானத் தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 61 சிறார்கள் உயிர்நீத்த சம்பவத்தின் பத்தாவது ஆண்டு துயர நினைவேந்தல் நிகழ்வுகள்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல்-04 மணி முதல் யாழ். பொது நூலகத்திற்கு அண்மையிலுள்ள முற்றவெளிப் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வடமாகாண விவசாய அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
61 மாணவச் சிறுவர்களும் படுகொலை செய்யப்பட்ட இடைப்பட்ட 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியம் சார்ந்த விடுதலை சார்பாக, எங்களுடைய விடுதலை சார்பாக நாங்கள் சிறிதளவிலாவது முன்னேற்றம் கண்டிருந்தால் நாம் அக் குழந்தைகளுக்குச் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலியாக இருந்திருக்கும். ஆனால், இன்று வரை வடக்கில் நாம் எதிர்பார்த்த முன்னேற்றம் எதுவும் ஏற்படாமை துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.

No comments:

Post a Comment