நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து என அழைக்கப்படுகிறது. பசலிக்கா அந்தஸ்து பெற்றது.
உலகப் புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பெருவிழா தொடக்க நிகழ்ச்சியாக திருக்கொடியேற்றம் நேற்று(சனிக்கிழமை) மாலை நடைபெற்றது. முன்னதாக கொடி ஊர்வலம் நடைபெற்றது.
22 அடி நீளமும், 14 அடி உயரமும் கொண்ட புனிதக்கொடி பேரராலய வாயிலிருந்து பாரம்பரியமான பாதைகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு போராலயத்தை வந்தடைந்தது.
பின்னர் தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் கொடியை புனிதம் செய்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6.40 மணிக்கு பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆவே மரியே, மரியே வாழ்க என பக்தி முழக்கம் எழுப்பி வழிபாடு மேற்கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மின் விளக்கு அலங்காரங்கள் ஒளிரச் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலிகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் குமார், பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், உதவி பங்கு தந்தையர் ஆரோக்கிய சுந்தரம், ஜோதி நல்லப்பன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரளான அளவில் பங்கேற்றனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வேளாங்கண்ணியின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்பு படையினர் கடற்கரை மற்றும் சில பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான புனிதப் பாதையில் சிலுவைப்பாதை நிறைவேற்றும் நிகழ்ச்சி வருகிற 4–ந் தேதியும், அலங்கார தேர்பவனி 7–ந் தேதியும், ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் 8–ந் தேதியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணியளவில திருக்கொடி இறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது.
No comments:
Post a Comment