July 2, 2016

மன்னார் பொது வைத்தியசாலையில் நள்ளிரவில் தொடரும் அவலம்-நோயாளர்கள் அசௌகரியம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்களை பாதிக்கின்ற வகையில் தொடர்ச்சியாக  பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற போதும் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாக மக்கள்  விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக இன்று(01-07-2016) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையில் இருந்த பெண் வைத்தியரின் நடவடிக்கை ஓர் சான்றாக காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடுமையாக தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவரை மன்னார்  பொது வைத்தியசாலையில் இன்று (01-07-2016) வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் அனுமதிக்கச் சென்ற போது குறித்த குடும்பஸ்தரின் மனைவியுடன் ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் காரணமாக அங்கு சென்றிருந்த அருட்தந்தையர்கள் உற்பட சிலரை அங்கிருந்து உடனடியாக வெளியே செல்லுமாறு கடமையில் இருந்த பெண் வைத்தியர் அதட்டி கூறியதோடு அம்புலான்ஸ் வண்டி மூலம் அழைத்து வரப்பட்ட நோயாளிகளை பரிசோதிக்காது நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் போது நள்ளிரவு சுமார் 2 மணியளவில் வங்காலை பொலிஸாரினால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் ஒருவரை தான் பரிசோதனைக்கு உற்படுத்த முடியாது என்றும் சட்ட வைத்திய அதிகாரியின்(ஜே.எம்.ஓ) பரிசோதனைக்கே உற்படுத்த முடியும் என கூறிய குறித்த பெண் வைத்தியர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதோடு உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களின் ஓய்வரைக்குள் சென்றுள்ளார்.

குறித்த பெண் வைத்தியர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

குறித்த நேரத்தில் அங்கு சென்ற அருட்தந்தையர்களை அவமதிக்கும் வகையில் குறித்த பெண் வைத்தியர் நடந்து கொண்டமை மற்றும் நோயாளர்களை பரிசோதிக்காது நீண்ட நேரமாக தொலைபேசியில் கடும் தொணியில் உரையாடல்களை மேற்கொண்டமை குறித்து சமூக ஆர்வலர்கள் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.

எனவே தொடர்ச்சியாக மன்னார் பொது வைத்தியசாலையில் பல்வேறு இடர்கள் ஏற்பட்டு வருகின்ற போதும் அங்கு கடமையாற்றுகின்ற பணியாளர்களை பாதிக்கின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சம்பவ தினமன்று கடமையில் இருந்த பெண் வைத்தியரின் அசமந்த போக்கான நடவடிக்கைக்கு எதிராக மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment