July 23, 2016

நல்லாட்சி என்ற பெயர்ப் பலகைக்குள் ஒழிந்தகொண்டு தவறிழைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டேன்:ஜனாதிபதி!

நல்லாட்சி என்ற பெயர்ப் பலகைக்குள் ஒழிந்தகொண்டு தவறிழைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.


அதனால் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்பவர்கள் இதய சுத்தியுடன் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் மக்கள் அரசாங்கம் தொடர்பில் கொண்டுள்ள நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால, இதனால் என்ன நடக்கும் என்பதை 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் நன்கு உணர்த்தியிருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் அபிவிருத்திக்கான சவால்கள் என்ற தலைப்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதீதியாக கலந்துகொண்டார்.

ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால, ஆட்சியிலும், அரச துறையிலும் அங்கம் வகிக்கும் தரப்பினர் தமக்கிடையில் குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருக்காது, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, அதிகார வெறியனுமல்ல அதேபோல் கூற வேண்டிய விடயங்களை கூறுவதற்கு பயந்தவனுமல்ல. நல்லாட்சி என்ற பெயர் பலகையை வைத்துக் கொண்டு யாராவது தவறு இழைத்தால் அந்த தவறுக்கு இடமழிக்கவும் நான் தயாரில்லை. அதனை நான் தெளிவாக கூற விரும்புகின்றேன்.

அதனால் நல்லாட்சி என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆட்சியை நடாத்த ஒருபோதும் இடமளியேன். அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டியது அவசியம். அப்படியில்லா விட்டால் நாட்டு மக்கள் எம் மத்தியில் வைத்த நம்பிக்கை சுக்குநுாறாகிவிடும்.

அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மக்களின் கோபத்திற்கு அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்பதை கடந்த கால சம்பவங்கள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளன என்றார்.

அத்துடன் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு என்ற எப்.சீ.ஐ.டி யை முன்னிலைப்படுத்து நாட்டு மக்கள் மத்தியில் பீதியொன்று உருவாக்கப்பட்டள்ளதாகத் தெரிவிக்கும் ஜனாதிபதி, இதில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களும், அரச அதிகாரிகளும் இருப்பதாகவும் கூறுகின்றார்.

எவ்.சி.ஐ.டி பீதியை அனைவரும் மனங்களிலிருந்து நீக்கிக் கொள்ள வேண்டும். ஏன் எவ்.சி.ஐ.டி என்ற பிரிவு நாட்டில் உருவானது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டில் இடம்பெறும் நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு தேவையான புதிய கட்டமைப்புக்களை உருவாக்குவதாகவும், லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்துவதாகவும், அதேபோல் அரச சேவையில் உள்ளவர்கள் எவருக்கும் அடிபணியாது தைரியமாக தலைநிமிர்ந்து பணியாற்றக் கூடிய சூழலை உருவாக்குவேன் என்று உறுதியளித்திருந்தேன்.

அதற்கமையவே ஆட்சிப்பீடம் ஏறியதும் உடனடியாக 19 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றி சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவ நடவடிக்கை எடுத்தேன்.

அதற்கமையவே இந்த எவ்.சி.ஐ.டி போன்ற அலுவலகங்கள் திறக்கப்பட்டன.  கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான ஊழல் மோசடிகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் அதனை நிறுவினோம்.

ஆனால் அவற்றை மறுவலமாக பயன்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதற்காகவும் அரசியல் வாதிகள் எவ்.சி.ஐ.டி யை பயன்படுத்துவார்களானால் அவர்கள் மத்தியில் அச்சமும், மானம் போய்விடும் என்ற பயமும் ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை நாடு ஒன்றுக்கு தேவைதான்.

பயமும் வெட்கமும் இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தை போல் நடந்து கொள்வான் என்பதை  நாம் அனைவரும் அறிவோம். ஊழல் மோசடிகளால் நிரம்பி வழிந்த ஒரு சமூக கட்டமைப்பு ஒன்று கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்தது.

அதனால் அந்த சமூக கட்டமைப்பை ஒட்டு மொத்தமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதனால் நாட்டு மக்களுக்காகவும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருபோதும் பின்னிற்கப் போவதில்லை என்றார்.

அரசதுறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாராசுவாமி ஆகியோரும் கலந்துகொண்டு அபிவிருத்திக்குத் தடையாக இருக்கும் விடையங்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

No comments:

Post a Comment