September 14, 2015

த, தேகூட்டமைப்பும் மு, காங்கிரசும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருப்போம்; கி.துரைராசசிங்கம்!

கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருப்போம். இது அழிவுக்கான துப்பாக்கி அல்ல, நாம் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகப்
பயன்பட்டு சிறுபாண்மை மக்களுடைய உரிமைகளைப் பெற்றெடுப்பதிலே நாங்கள் கூடுதலான அழுத்தங்களைப் பிரயோகிப்போம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு முதலமைச்சரின் பிரதேச சபைகளுக்கான களவிஜயம் தொடர்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்டு நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!
எந்த எந்த விடயங்களை எடுத்துக் கொள்கின்றோமோ அந்த அந்த விடயங்களையெல்லாம் நாம் எவ்வாறெல்லாம் செய்ய முடியும் என்று தூங்காமல் கனவு காண்பவன் அந்தக் கனவினை நனவாக்குவதற்கு முயற்சி செய்பவன் தான் நாட்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவனாகவும் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியவனாகவும் இருப்பான்.
எமது மாவட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பிரதேச சபைகளுக்கும் சென்று அவற்றை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளை நாம் இப்போது மேற்கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சரியான ஒரு செயற்திட்டம் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது அமைச்சரினுடைய ஆளணி இங்கு வந்து ஒவ்வொரு சபைகளையும் ஆராய்ந்து சபைகளிலும் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவர்களுடைய மதிப்பீடுகளைச் செய்திருக்கின்றார்கள்.
நாட்டிலே நாட்டுப்பற்று இல்லாத மக்களைக் கொண்ட ஒரு நாடு என்று சொன்னால் அது இலங்கை தான். அதற்குக் காரணம் என்னவென்றால் இங்கிருக்கின்ற பெரும்பாண்மை மக்கள் இந்த நாட்டில் தங்களின் விருப்பப் படி சிறுபாண்மை மக்கள் வாழ வேண்டும் என்ற வரன்முறையற்ற கொள்கையினை கடைப்பிடித்து வந்தார்கள்.
ஆனால் தற்போது அந்த நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அந்த நிலையை மாற்றி இந்த நாடு பன்மைத்துவம் மிக்க நாடு என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். எனவே இந்த பன்மைத்துவம் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றதென்பது தான் இந்த 65 ஆண்டுகளுக்குப் பின்பு நாம் அடைந்திருக்கின்ற ஒரு முன்னேற்றம்.
அந்தவகையில் அதிகாரப் பரவலாக்கல் அதிகாhரப் பகிர்வு என்கின்ற விடயத்தில் இந்த சபைகளுக்கெல்லாம் வழங்கப்படுகின்றதென்பது அதிகாரப் பகிர்வு இதைத் தான் இந்த ஒற்றையாட்சித் திட்டத்தின் கீழ் செய்ய முடியும். எமது பிரதமர் அவர்களும் சொல்லி வருகின்றார் இந்த நாட்டில் ஒற்றையாட்சித் திட்டத்தின் கீழ் கூடுதலான அதிகாரங்களைக் கொடுப்போம் என்று, எனவே எங்களைப் பொருத்த வரையிலும் இதற்கு நாம் உடன்பட்டவர்கள் அல்ல. ஏன் நான் நினைக்கின்றேன் முஸ்லீம் காங்கிரஸைப் பொருத்த வரையிலும் அவர்களும் இதற்கு உடன்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.
நாம் கேட்பது அதிகாரப் பகிர்வு அல்லது அதிகாரப் பங்கீடு, நாட்டிலுள்ள முக்கிய விடயங்களைத் தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பாக நாங்களே எங்களுக்குத் தேவையான சட்டங்களை ஆக்கிக் கொள்வதும் எங்களுக்குத் தேவையான நிதியினை சேகரித்துக் கொள்வதும், எங்களை வளப்படுத்திக் கொள்வது எமது கலை, கலாச்சார, பண்பாட்டு விடயங்களைக் கையாழ்வதும் போன்றன தான் அதிகாரப் பங்கீடு அதனைத் தான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எங்களைப் பொருத்த மட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இருப்போம். இது அழிவுக்கான துப்பாக்கி அல்ல, நாம் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகப் பயன்பட்டு சிறுபாண்மை மக்களுடைய உரிமைகளைப் பெற்றெடுப்பதிலே நாங்கள் கூடுதலான அழுத்தங்களைப் பிரயோகிப்போம். இந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் எமக்கு இருக்கும் இந்த குறுகிய காலப்பகுதியில் எமது அடைவுகளை நாம் அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கின்றோம். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லீம் காங்கிரசிற்கும் இடையில் எவ்வித வித்தியாசமான கருத்துக்களும் இருக்காது.

No comments:

Post a Comment