August 21, 2015

எதிர்கட்சி தலைவர் பதவியை சம்பந்தன் கோரமுடியாது; ரணில் செய்த சதியா?

தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை கைச்சாடப்பட்டதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கிடைக்காது என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைமை பதவியை கோர முடியும் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றாவது அரசியல் கட்சி என்ற நிலையை தவிர்ப்பதற்காக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கை என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அரசியலமைப்பின்படி இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் மூன்றாவது கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்பது நடைமுறை விதியாகும்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் தனித்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டமையினால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தற்போது மூன்றாவது அரசியல் கட்சியாக மாறியுள்ளது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நான்காவது கட்சியாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரசியலமைப்பின் கீழான நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியும் என்றும் ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை விருப்பங்களுக்கு ஏற்பவே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment